டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் சுற்றுலா வந்த 2 விமான படை வீரர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர்.உத்தரகாண்டில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநிலத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளதால் வருடந்தோறும் நடக்கும் சார்தாம் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. கங்கை, அலக்நந்தா,பாகீரதி,காளி உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள கீத் என்ற இடத்தில் உணவு தானிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகிறது. கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் சன்பிரயாக் நகரை சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த மழையால் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.விமான படையை சேர்ந்த வீரர்கள் நைனிடாலுக்கு சுற்றுலா வந்திருந்தனர். நைனிடால் அருகே உள்ள பீம்டால் ஏரியில் மூழ்கி விமான படை வீரர்களான பிரின்ஸ் யாதவ்(22) மற்றும் சகில் குமார்(23) உயிரிழந்தனர். போலீசார் மற்றும் பொதுமக்கள் இணைந்து இருவரின் உடல்களையும் மீட்டனர்.