சென்னை: வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடமாற்றம் செய்தவர்களின் நீக்கத்தை தெளிவாக வகைப்படுத்தி, 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நாளை (27ம் தேதி) வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5ம் தேதி வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று காலை 11.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான திமுக (ஆர்.எஸ்.பாரதி, தாயகம் கவி), அதிமுக (ஜெயக்குமார், இன்பதுரை), காங்கிரஸ் (நவாஸ், சந்திரமோகன்), பாஜ (கராத்தே தியாகராஜன், சவுந்தரராஜன்), மார்க்சிய கம்யூ. (ஆறுமுகநயினார், சுந்தர்ராஜன்), இந்திய கம்யூ. (ரவீந்திரநாத், வீரபாண்டி), தேமுதிக (பார்த்தசாரதி, சச்சின் ராஜா), பகுஜன் சமாஜ் கட்சி (சத்யமூர்த்தி, சார்லஸ்), ஆம்ஆத்மி (ஸ்டெல்லாமேரி, பாரூக்), தேசிய மக்கள் கட்சி (ஜி.சீனிவாசன், ஜி.பி.ரமேஷ்) உள்ளிட்ட 10 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் தங்கள் கட்சிகள் சார்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்ததும் கட்சி தலைவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.பாரதி (திமுக): வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இறந்தவர்கள், இடமாற்றம் செய்தவர்களின் நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெளிவாக வகைப்படுத்தி பல குளறுபடிகள் இருப்பதை சுட்டிக்காட்டினோம். அதேபோல், பல ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர் நீக்கப்படாமல் இருப்பதால் அது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். வரைவு வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பகுதிகளில் இருக்கும் அதிகாரிகளிடையே ஒற்றுமை இருக்க வேண்டும், அவர்களுக்கான பயிற்சியினை முறையாக அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.
ஜெயக்குமார் (அதிமுக): வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், இறந்தவர்கள் உள்ளிட்ட படிவங்கள் விருப்பு, வெறுப்பு இல்லாமல் அந்தந்த பகுதிகளில் உள்ள கட்சிகளுக்கும் வழங்கப்பட வேண்டும். பெயர் சேர்ப்பு முகாம் நடக்கும்போது அரசியல் கட்சிகளை மட்டும் சார்ந்து இருக்காமல் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களின் பெயர்களை முழுமையாக சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பல பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது. முகவரி மாறிய பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும். 100 சதவீதம் வெளிப்படை தன்மையுடன் வாக்காளர் பட்டியல் இருக்க வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக): பூத் அளவில் ஏஜெண்டுகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கிய பட்டியலை தேர்தல் ஆணைய வலைதளத்தில் இன்னும் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதை சுட்டிக்காட்டினோம். அதை விரைவில் பதிவேற்ற வேண்டும். தேர்தல் ஆணைய நடைமுறையை பின்பற்றி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட எங்களது முழு ஆதரவை வழங்குவோம்.
நவாஸ் (காங்கிரஸ்): தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்குகளிக்க வருவோர்களில் அதிகப்படியாக பெண்கள் வருவதால் அவர்களுக்கான வசதிகளை வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தி வேண்டும். அதேபோல், ஒருவருக்கு பல இடங்களில் வாக்குகள் இருப்பதை தேர்தல் ஆணையம் சரி செய்து அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும்.
வீரபாண்டி (இந்திய கம்யூ.): வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம். சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அவர்களையும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.
பார்த்தசாரதி (தேமுதிக): 18 வயதான பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி மனு அளிக்கும்பட்சத்தில் அதனை கொடுக்கும்போதே, விண்ணப்பித்திற்கான படிவங்களை வழங்கிட வேண்டும். தேர்தல் பணியில் அரசு பணியாளர்கள் மட்டுமின்றி, தனியார் அலுவலர்களையும் நியமனம் செய்ய வேண்டும்.
ஸ்டெல்லா (ஆம் ஆத்மி): வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க, வாக்காளர்கள் கைரேகையை பதிவிட்டு வாக்கு செலுத்தும் நடைமுறையை கொண்டுவர வேண்டும். இளம் வாக்காளர்களை அதிகரிக்க பள்ளி மற்றும் கல்லூரிகளில் முகாம்களை நடத்தப்பட வேண்டும். வாக்குச்சாவடிகளில் நெரிசல்களை ஏற்படுவதை தவிர்க்க தனியார் கட்டிடங்களையும் வாக்குச்சாவடிகளாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிலை முகவர்கள் நியமிக்கலாம்: தேர்தல் ஆணையம் அனுமதி
சென்னை, தலைமை செயகத்தில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்த பிறகு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள அறிக்கை: ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாளை (27ம் தேதி) வெளியிடப்படுகிறது. நாளை முதல் 09.12.2023 (சனிக்கிழமை) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கும் பணிகள் நடைபெறும். 04.11.2023 (சனி), 05.11.2023 (ஞாயிறு) மற்றும் 18.11.2023 (சனி), 19.11.2023 (ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடைபெறும். இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2024 வெளியிடப்படும்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்குச்சாவடி நிலை முகவர்களை நியமிக்கலாம். அந்த முகவர்கள் சிறப்பு சுருக்க முறை திருத்தம், 2024 மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு திருத்தங்கள் மற்றும் பிறவற்றை அடையாளம் காண உதவி செய்யலாம். வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இறந்த மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் பற்றி வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் நிர்ணயிக்கப்பட்ட படிவங்களில் தகவல் வழங்கலாம்.