விழுப்புரம்: விழுப்புரம் சாலாமேடு ஏரியில் டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதுகுறித்து மீன்வளம், சுற்றுச்சூழல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் சாலாமேடு பகுதியில் பொன்னேரி உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி விவசாயத்திற்கும், குடிநீர் ஆதாரத்திற்கும் முக்கியத்துவமாக விளங்குகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஹோட்டல் கழிவுநீர் மற்றும் மதுபான ஆலை ரசாயன கழிவுகள் கலந்து நீரின் நிறமே மாறிவிட்டதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் புகார் அளித்து வந்தனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை, மாசுகட்டுபாட்டு வாரிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் விசாரணை நடத்தி ேஹாட்டல் கழிவுகளும், மதுபான ஆலை ரசாயன கழிவுகள் கலக்காமல் ஏரி நீரினை பாதுகாக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்து வந்தனர். இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே தற்போது இந்த ஏரியில் மீன்வளத்துறை சார்பில் மீன்வளர்ப்புக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. சுரேஷ் என்பவர் குத்தகைக்கு எடுத்து மீன்குஞ்சுகளை வளர்த்து வந்துள்ளார். இன்னும் ஒரு மாதங்களில் இந்த மீன்கள் விற்பனைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து குத்தகைதாரர் கூறுகையில், இந்த ஏரியில் ஹோட்டல் கழிவுகளும், மதுபான ஆலை ரசாயன கழிவுகள் கலப்பதை பலமுறை சுட்டிகாட்டியும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது கழிவுகள் கலந்ததால் மீன்கள் இறந்து செத்து மிதக்கின்றன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இறந்துபோன மீன்களை பறவை, நாய்கள் சாப்பிட்டு வருகின்றன. மேலும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. மீன்கள் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்று தெரிவித்தார். இதனிடையே நேற்று மீன்வளத்துறை உதவி இயக்குநர் நித்ய பிரியதர்ஷனி மற்றும் மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு ஏரியில் ரசாயன கழிவுகள் கலந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.