செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள பயணிகள் முன் பதிவு மையத்தில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்த நிலையில் கிடந்தார். வாரத்தில் முதல் நாள் என்பதால், நேற்று ரயில் நிலையத்தில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என, டிக்கெட் வாங்க கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. காலை 6 மணி முதலே ரயில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயண சீட்டை வாங்கி சென்றனர். காலை 6 மணி முதல் 11 மணி சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக உயிரிழந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை அகற்றப்படவில்லை.
இது ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு நகர போலீசாருக்கும், செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கும் எல்லை பிரச்னை காரணமாக யார் சடலத்தை எடுப்பது என்பதில் போட்டி நிலவியது. இதையடுத்து, ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.