சென்னை: மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஆஷல் பேம் (24). இவர் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5ம் தேதி பணி முடிந்து தனது அறைக்கு நடந்து சென்ற போது, இளம்பெண்ணுடன் வந்த தனியார் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர், முகவரி கேட்பது போல் ஆஷல் பேம் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து ஆஷல் பேம், குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் மதுரவாயல் பகுதியை சேர்ந்த சூர்யா (19) என்றும், இவர் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
சூர்யா பகல் நேரத்தில் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இரவு நேரத்தில் தனது காதலியான சுஜித்ரா (20) உடன் இணைந்து இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து தொடர் செல்போன் மற்றும் வழிப்பறி செய்து வந்தது தெரியவந்தது. அதேநேரம் சூர்யா மீது பைக் திருட்டு மற்றும் கோயில் உண்டியல் திருட்டு என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. சூர்யா திருட்டு தொழிலை 17 வயதில் இருந்து செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து, சூர்யா மற்றும் அவரது காதலி சுஜித்ராவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது.