திருச்சி: இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கூறினார். திருச்சி புத்தூரில் உள்ள சிவாஜி சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கை, புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி கொடுப்போம் என்ற நிலைபாட்டுடன் ஒன்றிய அரசு உள்ளது. தமிழகத்தை பாஜ அரசு தொடர்ந்து புறக்கணிக்கிறது. மாநில உரிமைகளை பறிக்க தொடர்ந்து சதி திட்டம் போடுகிறது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தால் அங்கும் ஜனநாயகம் பின்பற்றப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
கனவு காணும் தலைவர்களுக்கு சொல்கிறோம். இந்தியா கூட்டணியை தமிழ்நாட்டில் எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது உறுதியான கூட்டணி, இரும்பு, எஃகு கோட்டை கூட்டணி. எனவே யாரும் பகல் கனவு காண வேண்டாம். அப்படி பகல் கனவு காண்பவர்களுக்கு திருநெல்வேலி அல்வா தயாராக இருக்கிறது, கொடுத்து விடுவோம். பெண்களுக்கு எதிரான கட்சி பாஜ. உடன்கட்டை ஏறுதலை ஆதரித்து பேசுகிறார்கள். அவர்கள் பிற்போக்கு வாதிகள். தமிழிசை சதி என்றால் என்ன, உடன்கட்டை ஏறுதல் என்றால் என்ன என்பதை படிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.