சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்பி தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் அதிமுக சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசினார்.
அவர் பேசும்போது, நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக போட்டியிடுகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டதட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை என்று கூறினார். உண்மைத்தன்மையை ஆராயாமல் எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது, மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் என்மீது அவதூறு பரப்பியுள்ளார்.
பொதுமக்களுக்கு சேவை செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படும் என்மீது தொகுதி மக்களிடமும், தமிழக மக்களிடமும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் எடப்பாடி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் நற்பெயர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கே.வி.சக்திவேல் முன்பு மே மாதம் 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை ஆய்வுக்கு எடுத்த எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவுள்ளதாக தெரிகிறது.