சென்னை: சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம், வார்டு-63, புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ், ரூ.1 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட நவீன பல் மருத்துவமனையினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்துப் பார்வையிட்டார். இந்த மருத்துவமனை ரூ.1 கோடி மதிப்பில் சிறந்த நவீன பல் மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.35 லட்சம் மதிப்பில் இந்த மருத்துவமனை கட்டிடம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பல் மருத்துவர், ஒரு ஊடுகதிர் நுட்புநர் மற்றும் ஒரு பல் சுகாதார நிபுணர் ஆகியோர் பணியமர்த்தப்பட்டு, நாள்தோறும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் வி.ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக் குழுத் தலைவர்கள் சிற்றரசு, டாக்டர் கோ. சாந்தகுமாரி, மண்டலக்குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், கவுன்சிலர் சிவ ராஜசேகரன், மாநகர நல அலுவலர் டாக்டர் எம். ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.