சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் எம்.பி. தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எடப்பாடி நேற்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:
சென்னையில் அதிமுக சார்பில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பேசினார். அவர் பேசும் போது, நம்முடைய கூட்டணி கட்சி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற திராவிட முன்னேற்ற கழத்தினுடைய வேட்பாளர் அவருடைய சொந்த நலனுக்காக போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவர் நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் கிட்டதட்ட 75 சதவீத நிதியை செலவே செய்யவில்லை என்று கூறியுள்ளார். உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பேசிய இந்த பேச்சு உண்மைக்கு புறம்பானது, மக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எந்த ஆதாரங்களும் இல்லாமல் என் மீது அவதூறு பரப்பியுள்ளார். பொதுமக்களுக்கு சேவை செய்வதையே முழுநேர பணியாக கொண்டு செயல்படும் என்மீது தொகுதி மக்களிடமும், தமிழக மக்களிடமும் உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் எடப்பாடி பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரும் நற்பெயர் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, எடப்பாடி பழனிசாமி மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500ன் கீழ் அவதூறு நடவடிக்கை எடுத்து அவரை தண்டிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு எழும்பூர் 13வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கே.வி.சக்திவேல் முன்பு மே 14ம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை ஆய்வுக்கு எடுத்த எழும்பூர் நீதிமன்றம் இந்த வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அவரது சார்பில் வழக்கறிஞர் எஸ்.ஐயப்பராஜ், தயாநிதி மாறன் எம்.பி. சார்பில் வழக்கறிஞர் விவேகானந்தன் ஆஜராகினர். அப்போது நீதிபதி, உங்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார். இதையடுத்து அடுத்தக்கட்ட விசாரணைக்காக வழக்கை செப்.19ம் தேதி தள்ளிவைத்தார்.
மூத்த குடிமகன் என்பதால் நேரில் ஆஜராக விலக்கு வேண்டும்: நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனு
முன்னாள் ஒன்றிய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், நான் 70 வயதான மூத்த குடிமகன், அதிமுக பொதுச்செயலாளராகவும், தமிழக எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளேன். நீதித்துறையின் மீது மிகுந்த மரியாதையும் கொண்டுள்ளேன். உடல்நல பாதிப்பு காரணமாக மருந்து உட்கொண்டு வருகிறேன், வழக்கை தாமதப்படுத்தும் நோக்கமோ, அல்லது இழுத்தடிக்க வேண்டும் என்ற எண்ணமோ இல்லை. எனவே, வழக்கின் விசாரணைகளில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என கோரியிருந்தார்.