தமிழக அரசியலை பொறுத்தவரை மதுரைக்கு எப்போதுமே மிக முக்கிய பங்கு உள்ளது. அதிமுக, தேமுதிக உள்பட பெரும்பாலான அரசியல் கட்சிகளின் ஆரம்பம் இங்கிருந்துதான் துவங்கியது. அரசியல் பலம் காட்டும் முக்கிய மாநாடுகள் அதிகளவு நடந்துள்ளது. பாண்டியர்கள் ஆண்ட மண், பாரம்பரிய பெருமை பேசும் தூங்கா நகரமென அக்காலம் முதல் இக்காலம் வரை அனைவராலும் போற்றப்படும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 1978ம் ஆண்டுக்கு பின், 47 ஆண்டுகள் கழித்து திமுக பொதுக்குழு மதுரையில் கூடுவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தென்மாவட்டங்களில் கட்சியின் பலத்தை மேலும் அதிகரிக்கும் மற்றொரு முயற்சியாகவும் பொதுக்குழு பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்ததும், மதுரை, உத்தங்குடி கலைஞர் திடலில் இதற்கான பணிகள் துவங்கின. கடந்த ஒரு மாதமாகவே நடந்து வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், கூட்டம் நடக்கும் இடம் சென்னை அறிவாலயம் போலவே பிரமாண்டமாக, கலைநயத்துடன் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
100 அடி உயர கம்பத்தில் திமுக கொடி, பசுமையான செயற்கை புல் தரை, பூச்செடிகள், டைல்ஸ் பதித்த தரைகள், கூட்ட இடத்திற்கு செல்ல மினி சாலைகள், வழியெங்கும் திமுக அரசின் நான்காண்டு சாதனை பதாகைகள், வண்ணமயமான அரங்குகள், பிரமாண்ட மேடை, 10 ஆயிரம் பேர் வரை அமர்ந்து பார்வையிடும் வசதி, கண்ணுக்கு எட்டும் தூரம் வரை திமுகவின் பிரமாண்ட கொடிகள், அறுசுவையை தாண்டியதொரு சுவையில் கூட்டத்தில் பங்கேற்போருக்கு சைவம், அசைவத்தில் விதம்விதமான மதுரை உள்பட தென்மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற உணவு வகைகள், வாகனங்களை நெரிசலின்றி நிறுத்த விசாலமான பார்க்கிங் வசதி என பார்ப்பவர்கள் பிரமிக்கும் வகையில் ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன.
ஒரு கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடக்குமிடம் என எண்ணாமல், பொதுமக்களும் ஆர்வமுடன் பார்வையிட்டு கடந்த சில நாட்களாக செல்பி, குரூப் போட்டோ எடுத்துச் செல்கின்றனர். பொதுக்குழுவில் கட்சித்தலைவராக பங்கேற்பதற்காக மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேற்று 25 கிமீ தூரம் ரோடு ஷோ சென்று பொதுமக்களை சந்தித்தார். இந்த நெடும் பயணத்தில் 3 சட்டமன்ற தொகுதி மக்களை அவர் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களின் மலர்ச்சியான வரவேற்பையும் ஏற்று, குடும்ப உறுப்பினர் போல கலந்துரையாடி, குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுச் சென்றது அனைவரையும் நெகிழ வைத்தது. சிலரைப் போல ஏ.சி அறையில் இருந்து அரசியல் செய்யாமல், வீதிக்கே வந்து தங்களை சந்திக்கும் ஒரு தலைவரை பெற்றிருக்கிறோமே என மக்கள் பெருமிதம் அடைவதையும் காண முடிந்தது. இன்று காலை துவங்கும் பொதுக்குழு கூட்டம் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னுரை கூட்டமாகவே பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் மிக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியான திமுகவின் முக்கிய பிரமுகர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பான திட்டங்களை வகுத்து, தமிழகத்தை செம்மையாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. அரசியலில் திருப்புமுனை நகரமாக பார்க்கப்படும் மதுரை, இன்னும் பல்லாண்டுகள் திராவிட மாடல் ஆட்சி தொடர ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். விடியல் பயணத்தை தொடர வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.