ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 3: ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், 50 ஆண்டுகளுக்குரிய தேதிகளை சொன்னால் அதற்கான கிழமைகளை சொல்லி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஊரணிபட்டி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர் சற்குருநாதன் (11). இவர் கற்றல் குறைபாடு உடையவர். ஆனால் இவரிடம் முந்தைய அல்லது பிந்தைய சுமார் 50 ஆண்டுகளில் ஏதாவது ஆண்டின் தேதி மற்றும் மாதத்தை கூறினால், அது எந்த கிழமை என்று கூறி அசத்துகிறார். அடுத்த 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் தேதி, மாதம் ஆகியவற்றை கூறினால், உடனடியாக அது வருகின்ற கிழமையை சற்றும் யோசிக்காமல் கூறி விடுகிறார். உதாரணத்திற்கு ஒருவர் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அவருடைய பிறந்த தேதியை கூறினால், கிழமையை கூறுவது மட்டுமில்லாமல் அந்த கிழமையின் தமிழ் தேதியையும் தெளிவாக கூறி நம்மை வியக்க வைக்கிறார்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை ரேணுகா கூறுகையில், ‘‘நல்ல திறமை உடைய மாணவர்களே இவ்வாறு சொல்ல முடியாத நிலையில் சற்று கற்றல் குறைபாடு உள்ள மாணவர் சற்குருநாதன் எல்லாேரும் திகைக்கும் வகையில் ஆண்டு, மாதம், தேதியை கூறினால் கிழமையை கூறி விடுகிறார். இந்த மாணவரின் திறமையை கண்டு தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களே வியந்து போய் உள்ளனர். இயற்கையாகவே இத்தகைய திறமையை கொண்டுள்ள சற்குருநாதனுக்கு உரிய பயிற்சி அளித்தால் இன்னும் இவருடைய திறமை மேம்படைய வாய்ப்பு உள்ளது’’ என்றார்.