புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12ம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான 787-8 டீரிம்லைனர் விமானம் லண்டனின் கேட்விக் நகருக்கு புறப்பட்டது. விமானம் மேலே பறக்க தொடங்கிய 30 நொடிகளிலேயே விமான நிலையம் அருகிலிருந்த மருத்துவ கல்லூரி கட்டிடம் மீது விழுந்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உள்பட மொத்தம் 275 பேர் பலியாகி விட்டனர். இந்நிலையில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய விமானப்போக்குவரத்து அமைச்சகம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “லிமானம் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, விமான விபத்து புலனாய்வு பணியகத்தின் உடனடி விசாரணைக்காக கடந்த ஜூன் 13ம் தேதி பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி பல்துறை குழு அமைக்கப்பட்டது.
சர்வதேச நெறிமுறைகளின்படி அமைக்கப்பட்ட இந்த குழு, ஒரு விமானப்போக்குவரத்து மருத்துவ நிபுணர், ஒரு ஏடிசி அதிகாரி, அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் பிரநிதிகளை உள்ளடக்கியது.
இந்த குழுவினர் இணைந்து விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து தரவுகளை பிரித்தெடுக்கும் செயல்முறையை கடந்த 24ம் தேதி மாலை தொடங்கினர். அதன்படி கருப்பு பெட்டியில் இருந்து விபத்து பாதுகாப்பு தொகுதி வெற்றிகரமாக பிரித்தெடுக்கப்பட்டது. 25ம் தேதி, மெமரி மாடூல் என்ற நினைவக தொகுதி பாதுகாப்பாக தரவிறக்கம் செய்யப்பட்டது. தற்போது இதன் ஆய்வுகள் நடந்து வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.