நெடுங்கழுத்தன் என்றும் நெடுங்கிளாத்தி என்றும் அழைக்கப்படும் இந்தப் பறவையின் பிரதான உணவு மீன்கள் ஆகும். மீன்கொத்தி, கொக்கு, நாரை போன்ற மற்ற மீனுண்ணும் பறவைகள் மீன் பிடிப்பதற்கும் இப்பறவை மீன் பிடிப்பததற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற பறவைகள் மரக்கிளைகளிலோ அல்லது ஆகாயத்தில் பறந்தபடியே இருந்துகொண்டோ நீரின் மேல் பரப்பிற்கு வந்து மீன்களைக் கொத்திப் பிடிக்கும். ஆனால், இந்தப் பறவையோ தண்ணீரில் தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நீந்திக் கொண்டிருக்கும். அப்போது எதிர்ப்படும் மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்தபடியே உண்ணும். இது தன் முழு உடலையும் நீருள் வைத்துக்கொண்டு நீந்தும்போது பாம்பு நீரில் நீந்திச் செல்வது போலவே தோன்றுவதால்தான் இப்பறவைக்கு பாம்புத் தாரா எனப் பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
மற்ற நீர் வாழ் பறவைகள் தண்ணீரில் இருக்கும்போது அவற்றின் உடல் நீரில் மூழ்கிடாது மிதந்திடும். அவற்றின் சிறகுகளில் தண்ணீர் ஒட்டாது. காரணம் அவற்றின் சிறகுகளில் ஒரு வகை எண்ணெய்ப்பசை இருக்கும். தவிரவும் சிறகுகளுக்கிடையே இருக்கும் காற்று அப்பறவைகளை மிதக்கச் செய்யும். ஆனால் பாம்புத்தாராவின் சிறகுகளில் அந்த எண்ணெய்ப்பசை இல்லாததால் தண்ணீர் சுலபமாக ஒட்டிக்கொண்டு, பளுவாக்கி, அதன் உடலை நீருக்கடியில் கொண்டு செல்லும். பாம்புத் தாரா தன் இனப்பெருக்க காலத்தில் நீர்நிலைகள் அருகேயுள்ள, மரக்கிளைகளில் குச்சி, சுள்ளிகளைக் கொண்டு கூடு கட்டி வாழும்.