திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான இணையத்தில் மட்டுமே பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அவ்வாறு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களிடம் தரிசன டிக்கெட் பெற்று தருவதாக கூறி மர்ம நபர்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி பெடிந்தி பிரபாகராச்சாரியா என்ற பெயரில், வைணவ யாத்ராஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் ஏழுமலையான் கோயில் அபிஷேகம், ஆர்ஜித சேவைகள், விஐபி மற்றும் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் பெற்று தருவதாக விளம்பரம் செய்து வருகின்றனர். இது முற்றிலும் போலியானது. இதுபோன்று பல மாநிலங்களில் வெவ்வேறு விதமாக விளம்பரம் செய்யும் போலி நபர்கள் மற்றும் வலைத்தளங்களை பக்தர்கள் நம்பி ஏமாற வேண்டாம். தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.
சுவாமி தரிசன டிக்கெட்டுகள் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.3.97 கோடி காணிக்கை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 76,126 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 24,720 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.3.97 கோடி காணிக்கையாக கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 4 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்ெகட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.