மதுரை: ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சகம் சில தினங்களுக்கு முன் கனிம வளங்கள் வெட்டி எடுப்பது குறித்து நாடு தழுவிய ஏலத்தை நடத்தியது. அதில், வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்கும் உரிமையை பெற்றுள்ளது. இதன்படி, ஆந்திர மாநிலம் பாலேபாளையம், தமிழகத்தின் மதுரை மாவட்டம், நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் டங்ஸ்டன் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடக்க உள்ள திட்டத்திற்கு ‘நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிம தொகுதி’ என பெரியடப்பட்டுள்ளது. இதனால், தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தலத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரிட்டாபட்டி மலையை ஒட்டி உள்ள நாயக்கர்பட்டியில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அம்மலையின் நான்கு திசைகளிலும் உள்ள வரலாற்று சின்னங்கள் மொத்தமாக அழிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தின் முதல் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மரபுத்தலமாக உள்ள இடத்தில் டங்ஸ்டன் வெட்டி எடுப்பதற்கான அறிவிப்பு அரிட்டாபட்டி கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராம மக்களின் தலையிலும் இடியை இறக்கி உள்ளது. இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேதாந்தா நிறுவனத்தால் தூத்துக்குடியில் நடத்தப்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பின், 2018ல் அந்த ஆலையை அரசு மூடியது. அந்நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது அதன் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு டங்ஸ்டன் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.