வாஷிங்டன்: அதிபர் பதவி மிகவும் ஆபத்தான தொழில் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வேதனையுடன் கூறினார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவிக் காலத்தில் பலமுறை கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்துள்ளார். குறிப்பாக, கடந்தாண்டு ஜூலை 13ம் தேதி, பென்சில்வேனியாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கி குண்டு அவரது காதைத் உரசிச் சென்றது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், செப்டம்பர் 15ம் தேதி, புளோரிடாவில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் இருந்தபோதும், அவர் மீது மற்றொரு கொலை முயற்சி நடந்தது.
அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையும் ஒருமுறை டிரம்பைக் கொல்ல முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அமெரிக்க வரலாற்றில் இதுவரை 4 அதிபர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதிபரின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் தடை விதிக்க நீதிபதிகளுக்கு இருந்த அதிகாரத்தைக் குறைத்து, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டிரம்ப் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது உயிர் பிழைத்தேன். இன்றளவும் என் காதில் அவ்வப்போது ஒருவித வலி ஏற்படுகிறது. ஆனால் பரவாயில்லை. அதிபர் பதவி என்பது ஒரு ஆபத்தான தொழில். கார் பந்தய வீரர்கள், காளைச் சண்டை வீரர்களின் இறப்பு விகிதம் மிகக் குறைவு. ஆனால், அதிபர் பதவியில் இருப்பவர்களில் சுமார் 5% பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விஷயம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால், நான் ஒருவேளை போட்டியிட்டிருக்கவே மாட்டேன்’ என்றும் அவர் வேதனையுடன் கூறினார். அதிபர் டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரம்பின் பேச்சுக்கு ஈரான் கண்டனம்
‘ஈரானின் உச்ச தலைவர் அலி காமெனியை, மிக கேவலமான மற்றும் அவமானகரமான மரணத்திலிருந்து நான்தான் காப்பாற்றினேன்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவரது பேச்சுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெளியிட்ட சமூக வலைதளப் பக்கத்தில், ‘உண்மையாகவே அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒரு உடன்படிக்கையை விரும்பினால், அவர் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா காமெனிக்கு எதிரான மரியாதையற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பேச்சை உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும், அவரது கோடிக்கணக்கான ஆதரவாளர்களின் மனதைப் புண்படுத்துவதையும் அவர் கைவிட வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.