மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நள்ளிரவில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித்திரிவதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். மானாமதுரை அருகே கிருங்காகோட்டை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டபோது பஸ் ஸ்டாப் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் வாளுடன் நின்றிருந்த ராஜகம்பீரத்தை சேர்ந்த முகமது பாரிஸ் (19), தினேஷ் (20), சிவகங்கை மேலவாணியங்குடியை சேர்ந்த பாலமுருகன் (19) ஆகியோரை கைது செய்தனர். இதில் முகமது பாரிஸ் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இதுசம்பந்தமாக ராஜகம்பீரத்தை ஆகாஷ் (19) என்பவரை நேற்று கைது செய்து நடத்திய விசாரணையில், தென்காசியில் இருந்து ஆயுதங்களை வாங்கியதாக தெரிவித்தார்.
இதையடுத்து தனிப்படையினர் தென்காசிக்கு விரைந்தனர். அங்கு, குற்றாலம், வாவா நகரை சேர்ந்த அருணாச்சலம் என்பவரை கைது செய்து வீச்சரிவாள், வாள்கள், பட்டா கத்திகள் என 26 ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் வழிப்பறிக்காக ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட தனிப்படையினருக்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி ஆஷிஜ் ராவத் பாராட்டு தெரிவித்தார்.