ஊட்டி : ஊட்டி படகு இல்லம் செல்லும் சாலை மற்றும் தலைகுந்தா பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த அபாயகரமான மரங்கள் அகற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு சாலையோரங்களிலும் கற்பூர மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் கடந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இந்த மரங்கள் சாலையோரங்களில் அதிக அளவு நடவு செய்யப்பட்டது.
ஆனால், தற்போது மழைக்காலங்களில் இந்த மரங்கள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது காற்றுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் இந்த மரங்கள் விழுந்து போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
சில சமயங்களில் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுந்தும் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், விபத்து அபாயம் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக சாலையோரங்களில் உள்ள மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக காற்றுடன் கூடிய பெய்த மழையின் காரணமாக, ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும், ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டது. அதேபோல் படகு இல்லம் செல்லும் சாலையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சாலை ஓரங்களில் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் அதிக அளவு உள்ள நிலையில் தொடர்ந்து காற்று அடித்தால் மரங்கள் விழும் அபாயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து இச்சாலையில் உள்ள அபாயகரமான மரங்களை அகற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
படகு இல்லம் – மரவியல் பூங்கா செல்லும் சாலை ஓரங்களில் உள்ள ராட்சத மரங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், தலைகுந்தா பகுதியிலும் அபாயகரமான மரங்கள் அகற்றப்பட்டன.
அதே சமயம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து படகு இல்லம் செல்லும் சாலை ஓரங்களிலும் ஏராளமான ராட்சத கற்பூர மரங்கள் மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இவைகளும் சுற்றுலா பயணிகளை மற்றும் உள்ளூர் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த அபாயகரமான மரங்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.