*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிவகாசி : சிவகாசியில் லாரி, லோடு ஆட்டோக்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் நடைமுறை அதிகரித்து வருவதால் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.சிவகாசியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், நூற்றுக்கணக்கான பிரிண்டிங் ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள் இயங்கி வருகின்றன.
இந்த ஆலைகளுக்கு பிரிண்டிங் செய்வதற்காக வெளிமாநிலங்களிருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லாரிகளில் அட்டை, பேப்பர்கள் மற்றும் மூலப் பொருட்கள் வந்து இறங்குகின்றன. அவ்வாறு கொண்டு செல்லும் போது, லாரி, வேன்களில் மூட்டைகளுக்கு மேல் அமர்ந்து ஆண், பெண் தொழிலாளர்கள் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். மேலும் பட்டாசு ஆலைகளுக்கு கட்டுமான பணிகளுக்கு பெண் தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் அழைத்து செல்வதும் அதிகரித்து வருகின்றது.
லாரியில் அட்டை, பேப்பர் அதிகமாக ஏற்றப்படும் போது, அதற்கு மேல் தொழிலாளர்கள் அமர்வதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படுகிறது. சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக சரக்கு வாகனங்களில் அதிகளவில் பொதுமக்கள் பயணிப்பதை காண முடிகிறது. வளைந்து நெளிந்து செல்லும் வளைவுகளில், வாகனங்கள் செல்வதே பெரும்பாடாக இருக்கிறது.
இந்தநிலையில் லாரிகள், லோடு ஆட்டோக்கள் மீது அமர்ந்து எந்தவித பிடிமானமும் இல்லாமல் பெண்களும் பயணிப்பதால் விபரீதம் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கிடையே தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் அதில் பெரும்பாலானோர் செல்போன் பேசியபடி வாகனங்களில் அமர்ந்து செல்கின்றனர்.
ஒருவேளை ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, செக் போஸ்ட்களை கடக்கும்போது, விதிகளை மீறி இவ்வாறு ஆட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வருவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆபத்தான முறையில் தொழிலாளர்களை ஏற்றி செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
சமூக ஆர்வலர் பாலமுருகன் கூறும்போது, சரக்குகளை ஏற்றிச் செல்லும் வேன்கள், லாரிகள் போன்றவற்றில் ஆட்கள் பயணம் செய்யக் கூடாது என்று மோட்டார் வாகனச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. சிவகாசியில் சரக்கு லாரிகள், லோடு ஆட்டோக்களில் தொழிலாளர்கள் செல்வது இப்போது சகஜமாகி விட்டது. ஆனால் இந்த வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பலியாவது அப்பாவி மக்களின் உயிர்கள்தான். சில நேரங்களில் இறந்தவர்கள், அந்த குடும்பத்திற்காக சம்பாதிக்கும் ஒரே நபராக இருந்திருப்பார்.
இதனால் அந்த குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன. இதுபோன்ற விபத்துக்களில் இறப்போரின் குடும்பத்தினர், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து எந்தவித இழப்பீட்டையும் கோர முடியாது. மாறாக, அவர்கள் பயணித்த வாகனத்தின் உரிமையாளரிடம்தான் நிவாரணம் கேட்டு முறையிட வேண்டும். பல விபத்துக்களில், லாரிகள் அல்லது வேன்களின் உரிமையாளர்கள் தலைமறைவாகி விடுகின்றனர் அல்லது தப்பி விடுகின்றனர். எனவே பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இனிமேல், லாரிகள், லோடு ஆட்டோக்களில் தொழிலாளர்கள் பயணிக்க அனுமதிக்ககூடாது என்றார்.