திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் துளசிமுக்கு பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (46). திருவனந்தபுரம் அருகே பாங்கோட்டில் நடன பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தார். கடந்த 2017ம் ஆண்டு முதல் 2019 வரை அவரிடம் நடனம் படிக்க சென்ற ஒரு 8 வயது மாணவனை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார். நாளுக்கு நாள் ஆசிரியரின் கொடுமை அதிகரித்ததை தொடர்ந்து நடனம் படிக்க செல்ல மாட்டேன் என்று சிறுவன் பெற்றோரிடம் கூறினான். ஆனால் பெற்றோர் அதை கேட்காமல் தொடர்ந்து சிறுவனை நடன பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று சுனில்குமார் மிரட்டியிருந்ததால் சிறுவனால் தனக்கு நடக்கும் கொடுமை குறித்து பெற்றோரிடம் கூட கூற முடியவில்லை. இதற்கிடையே சிறுவனின் தம்பியையும், சுனில்குமாரிடம் நடனம் படிக்க வைக்க பெற்றோர் தீர்மானித்தனர். அப்போதுதான் சிறுவன் தனக்கு நடக்கும் கொடுமை குறித்து பெற்றோரிடம் கூறினான்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் உடனடியாக பாங்கோடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து சுனில்குமாரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடன ஆசிரியர் சுனில்குமாருக்கு 52 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.3.25 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இவர் மீது இதேபோல மேலும் ஒரு போக்சோ வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தன்னிடம் நம்பிக்கையுடன் படிக்க வரும் மாணவர்களிடம் இது போன்ற மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர் எந்த கருணைக்கும் தகுதி இல்லாதவர் என்று நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.