சென்னை: நடன கலைஞரை தாக்கிய பிரபல நடன கலைஞர் தினேஷ் பதவி விலக வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் நடனக்கலைஞர்கள் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக தினேஷ் உள்ளார். திரைப்படம் ஒன்றில் குழு நடனமாடிய 100 கணக்கான நடன கலைஞர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என்றும் ரூ.35 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாகவும் கெனடாவில் வசிக்கும் நடன இயக்குனரான கௌரி சங்கர் என்பவர் தினேஷிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்த நடன இயக்குனர் மாரி என்பவர் மீதான பாலியல் குற்றசாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கெனடாவில் இருந்து சங்கத்திற்கு வந்த கௌரி சங்கரை தினேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி அவசர குழு கூட்டம் நடைபெற்றது. தன் மீது தவறு உள்ளதால் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஷ் கூறியதாலேயே அவசர பொதுக்குழு கூட்டப்பட்டதாக துணை தலைவர் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தற்போது பதவி விளக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட மறுத்து தன்னையும் தன் ஆதரவாளர்களையும் தினேஷின் ஆதரவாளர்களை இழிவாக பேசுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தினேஷ் மற்றும் கல்யாண் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தலைவர் பதவியிலிருந்து தினேஷ் விலக வேண்டும் என கூறி கல்யாண் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை அடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தினர்.