‘‘ஏதாவது கலைகள் கற்றுக்கொள், அது உன்னை காலமெல்லாம் வழிநடத்தும்” என்பது நல்வாக்கு. இன்றைய இளைய தலைமுறையினருக்கு போன் மற்றும் சமூக வலைத்தளங்கள் தான் உலகம் என அங்கலாய்க்கிறார்கள் பலர். ஆனால் எனக்கு நடனம், இசை, ஓவியம் என கலைகளின் மீதுதான் அதீத ஆர்வம் இருக்கிறது என அழுத்தமாக சொல்கிறார் சென்னை கோட்டூர்புரத்தில் தங்கி நடனக்கலை மற்றும் இசை கற்று வரும் பத்து வயது கலைஞர் ஸ்ரீ கவினி ஆனந்த்.
கவினிக்கு நடன ஆர்வம் ஏற்பட்டது எப்போது?
எனது பாட்டிக்கு நடன ஆர்வங்கள் உண்டு. எனது அம்மா முறைப்படி பயிற்சி பெற்ற நடன கலைஞர்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே இவர்களைப் பார்த்து நடன ஆர்வம் வந்துவிட்டது என்கிறார்கள். என் ஆர்வத்தை பார்த்து நான் இரண்டு வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து எனது அம்மா பரதம் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாராம். 2020 ஆம் ஆண்டு கோவிட் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் அம்மா பரதத்தை கற்றுக் கொண்டுவந்தார். அம்மா கடந்த முப்பது வருடங்களாக நடனம் ஆடி வருகிறாராம். அவரை பார்த்து தான் எனக்கும் பரத ஆர்வம் அதிகரித்தது. நான் சாப்பிடும்போது கூட நடன வீடியோவை பார்த்துக் கொண்டே தான் சாப்பிடுவேன். அதனால் எனக்கும் ஆன்லைன் வகுப்பின் மூலமாக பரதம் கற்கும் ஆர்வம் வந்துவிட்டது. அப்போது ஸ்ரீ முத்ராலயா லஷ்மி ராமசாமி அவர்கள் மூலமாக நடனம் கற்றுக் கொள்ள துவங்கினேன். அவர்தான் எனது குரு. எனது அம்மா கிரிஜா ஆனந்த் அவர்களுக்கும் குருவாக இருப்பவர் லஷ்மி ராமசாமி அவர்கள் தான். அதன் பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு முழு நேரமாக நேரடியான நடன வகுப்புகளுக்கும் இசை வகுப்புகளுக்கும் செல்ல வேண்டும் என்பதற்காக டெக்ஸாஸிலிருந்து இந்தியாவிற்கு வந்து தங்கி நடனம் கற்று வருகிறேன். இங்கு கோட்டூர் புரம் பகுதியிலுள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறேன். அப்படியே முத்ராலயா நடனப் பயிற்சி பள்ளியில் நடன பயிற்சி எடுத்தும் வருகிறேன்.
உங்களது இதர ஆர்வங்கள் குறித்து…
எனக்கு பரதம் என்பது ரொம்பவும் பிடித்தமான ஒன்று. அதனுடன் முறையான இசைப் பயிற்சியும் எடுத்து வருகிறேன். கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி என இரண்டையும் கற்றுக் கொண்டு வருகிறேன். தனியாக மேடைகளில் கச்சேரி செய்தும் உள்ளேன். பதினான்கு வயதான எனது அண்ணா மிருதங்கம் வாசித்து வருகிறார். கலைக் குடும்பத்தில் பிறந்த எனக்கு இசையார்வம் அதிகம் இருக்கிறது. அதேபோல் திருக்குறள் போட்டிகளில் பங்கேற்று பரிசு வென்றுள்ளேன். எனக்கு ஓவியம் வரைவதில் கூட நிறைய ஆர்வங்கள் உண்டு. பகவத் கீதை மற்றும் ஸ்லோகமும் கற்றுக்கொண்டு வருகிறேன்.
மேடை அனுபவங்கள் குறித்து….
எனது ஆறு மாதக் குழந்தைப் பருவத்தில் கிருஷ்ணராக மேடை ஏறியது தான் எனது முதல் மேடை என்கிறார்கள் எனது பெற்றோர். அதன் பிறகு அம்மா மற்றும் எனது குருவோடு நிறைய மேடைகளில் பங்கு பெற்று வருகிறேன். தனியாக ஒன்பது பாடல்கள் பாடி இசை மேடை கண்ட மகிழ்ச்சியான அனுபவங்கள் இருக்கிறது. எனது குரு லஷ்மி ராமசாமி அவர்களுடன் தசாவதாரம் ப்ரோக்ராமில் ஆடியது எனது பாக்யம். தற்போது ஜூன் 14 அன்று வாணி மஹாலில் எனது நடன அரங்கேற்றம் நடைபெற உள்ளது. எனது குரு லஷ்மி ராமசாமி மேற்பார்வையில் அதற்கான முழு பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறேன்.
எதிர்கால ஆசைகள் குறித்து…
எனது குடும்பமே கலைத் துறையில் ஆர்வமுள்ளது என்பதால் நடனம் இசை இரண்டிலும் நான் கற்க வேண்டியதும் பயணிக்க வேண்டியதும் ஏராளமாக இருக்கிறது. கல்வியிலும் நான் முதல் மாணவி தான். அதில் மருத்துவம் பயிலும் ஆசை இருக்கிறது. கலைத்துறையில் எனக்கென தனி இடம் பிடிக்க வேண்டும். அதற்காக நான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஒரு வருடமாக நான் எனது பெற்றோரைப் பிரிந்து இந்தியாவிற்கு வந்து எனது பெரியம்மா வீட்டில் தங்கி நடனம் கற்றுக் கொண்டு வருகிறேன். எனது பெற்றோர் மற்றும் பெரியம்மா எனது ஆர்வத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் எனக்கு கலைகளை கற்பித்த குருவிற்கும் நிறைய பெருமைகளை தேடி தரவேண்டும் என்கிற ஆசைகளோடு கூடிய சிறப்பான நம்பிக்கைகள் இருக்கிறது. அதற்காக நான் பயணிக்க வேண்டிய தூரங்களும் நிறைய இருக்கிறது.இன்றைய நவீன யுகத்தில் எங்களின் கவனத்தை அதிகம் கவருகின்ற பல்வேறு மாயவலைகள் இருக்கின்றன. இதெல்லாம் நாம் சிக்காமல் மூழ்கி கிடக்காமல் தப்பித்துக் கொள்ள வேண்டுமெனில் ஏதோவொரு கலைகளை அதாவது இசை, நடனம், ஓவியம், ஸ்லோகம் என எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டிகளில் கவனம் செலுத்தினால் நமது வாழ்வு மிகச்சிறப்பாக இருக்கும். இவையெல்லாம் நமது உடலுக்கும் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நூறு சதவீதம் நல்லது என சொல்கிறார் கவினி ஆனந்த்.
– தனுஜா ஜெயராமன்.