சென்னை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்து வரும் மழையால், தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அனைத்து அணைகள், நீர்நிலைகளை சேர்த்து மொத்தம் 174 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழையால் நகர்புறங்களில் இருந்து கிராமப்புறங்கள் வரை உள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்மேற்கு பருவமழையால் தென்மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், தங்கள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோவை ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து அணைகள், நீர்நிலைகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224.297 டி.எம்.சி. ஆகும்.
தற்போது மழையால் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரித்து இருப்பதால் நேற்றைய நிலவரப்படி 174.579 டி.எம்.சி. இருப்பு இருக்கிறது. அதாவது 78 சதவீதம் நீர் உள்ளது. குடிநீர், பாசன தேவைக்கு இந்த நீர் போதுமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பருவ மழை இல்லாததால் இதே காலக்கட்டத்தில் (2023-ம் ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி) வெறும் 82.707 டி.எம்.சி. அதாவது 36.87 சதவீதம்தான் நீர் இருந்தது.
இதனை ஒப்பிடுகையில் நடப்பாண்டு 2 மடங்கு நீர் இருப்பு அதிகம் உள்ளது. குறிப்பாக 120 அடி கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு 24.76 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 93.47 டி.எம்.சி. இருப்பு உள்ளது. அதேபோன்று, பவானிசாகர் அணையில் கடந்த ஆண்டு 17.72 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 24.77 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டு இருப்பைவிட அதிகமாகும்.
அமராவதி அணையில் கடந்த ஆண்டு 1.94 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 3.93 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும். முல்லைப்பெரியாறு அணையில் கடந்த ஆண்டு 2.91 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 5 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 2 மடங்கு அதிகமாகும். வைகை அணையில் கடந்த ஆண்டு 1.82 டி.எம்.சி. இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 2.96 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
பாபநாசம் அணையில் தற்போது 4.13 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும். மணிமுத்தாறு அணையில் கடந்த ஆண்டு 435 மில்லியன் கனஅடி இருப்பு இருந்தது. ஆனால் தற்போது 1.57 டி.எம்.சி. இருப்பு உள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 3 மடங்கு அதிகமாகும். இதேபோன்று , முக்கிய அணைகளில் குடிநீர் மற்றும் பாசன தேவைக்கான போதுமான நீர் இருப்பு உள்ளது என்று நீர் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையின் குடிநீர் ஆதாரமாக திகழும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஏரிகளில் இருந்து பெறப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த ஏரிகளுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் கிடைக்கும் தண்ணீர் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இதன் பூண்டி ஏரிக்கு 160 கனஅடி, புழல் 95 கன அடி மற்றும் வீராணம் ஏரிக்கு 2 ஆயிரத்து 46 கனஅடி நீர் வந்துள்ளது. 1.4 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 838.45 மில்லியன் கன அடி இருப்பு அதாவது 57.23 சதவீதம் இருப்பு உள்ளது.
இதன் மூலம் குடிநீர் தேவைக்காக 1,424 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இதேபோல் பூண்டி ஏரியில் இருந்து 127 கன அடியும், சோழவரத்தில் இருந்து 12, புழல் 224, கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை 15, செம்பரம்பாக்கம் 137 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிகளில் இருக்கும் 5.2 டி.எம்.சி. நீர் மூலம் 5 மாதத்திற்கு சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயல்பை விட 49 சதவீதம் அதிக மழை
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மூலம் இயல்பைவிட 4 சதவீதம் அதிகம் மழை கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு கோடை மழையும் பெரிய அளவில் கைக்கொடுத்தது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே 31ம் தேதி வரையிலான கோடை காலத்தில் தமிழ்நாட்டில் பதிவாகக்கூடிய 12 செ.மீ., மழையைவிட 18 சதவீதமாக அதாவது, 15 செ.மீ., மழை பெய்தது.
இதை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை காலம் கடந்த ஜூன் மாதம் ஆரம்பித்தது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு குறைவு என்றாலும், வெப்பசலனம், மேற்கு திசை காற்று வேகமாறுபாடு உள்ளிட்டவைகளால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அந்தவகையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, நேற்று வரையிலான நிலவரப்படி, தமிழ்நாட்டில் 49 சதவீதம் இயல்பைவிட அதிகமாகவே மழை கொட்டியுள்ளது.