Friday, July 11, 2025
Home மாவட்டம்சென்னை சென்னையில் சேதமடைந்த முக்கிய சாலைகள் தடுமாறும் போக்குவரத்து 

சென்னையில் சேதமடைந்த முக்கிய சாலைகள் தடுமாறும் போக்குவரத்து 

by Neethimaan

இன்னும் எத்த காலம்தான் நீடிக்கும் இசிஆர் விரிவாக்க பணி?

10 நிமிட தூரத்தை ஒருமணி நேரமாகியும் கடக்க முடியாமல் தவிப்பு

மாநகராட்சி சாலை போட்ட அடுத்த நாளே தோண்டிப்போடும் மெட்ரோ வாட்டர்

கடந்த 2006ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

இசிஆர் சாலை விரிவாக்க திட்டத்தை கடந்த 2006ம் ஆண்டு தொடங்கிய போது திட்டத்தின் மதிப்பு ரூ.159 கோடியாக இருந்தது. தற்போது 85 சதவீதம் உயர்ந்து ரூ.1100 கோடியாகியுள்ளது.

தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றால், முறையான சாலை வசதிகள் என்பது இன்றியமையாதது. சென்னையை பொறுத்தவரை மாநகர் பகுதிகளில் தரமான சாலை வசதிகள் இருந்தும் தற்போது நடைபெறும் பல்வேறு திட்ட பணிகளால் சேதமடைந்து காணப்படுகிறது. பல இடங்களில் ஒரு வழிப்பாதைகளாக மாற்றப்பட்டுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக பள்ளங்கள் நிறைந்ததாக காணப்படுவதால் பீக் அவர்ஸ்களில் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை 387 கிமீ நீளம் கொண்ட 471 பேருந்து தட சாலைகள் உள்ளன. 5 ஆயிரத்து 270 கிமீ நீளம் கொண்ட 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் உள்ளன. பேருந்து தடச் சாலைகளை மாநகராட்சி தலைமையகத்தில் உள்ள சாலைத்துறை பராமரித்து வருகிறது. உட்புற சாலைகள் அந்தந்த மண்டலங்கள் மூலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் தற்போது நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீர் வாரியம், மின்சார வாரியம், கண்ணாடி இழைவடங்கள் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்காகவும் அவ்வப்போது சாலைகள் தோண்டப்படுகிறது. ஆனால், அவற்றை முறையாக சீரமைக்காமல் விட்டு விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதான சாலைகளில் ஏற்பட்டிருக்கும் பள்ளங்கள், மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம் சேதமடைந்த சாலைகள் பல ஆண்டுகளாக இன்னும் குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது. தோண்டப்பட்ட சாலைகள் முறையாக மூடப்படாமல் இருப்பதால், அவை பள்ளங்களாக மாறி விடுகின்றன. மழை பெய்யும்போது, இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தையும், விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. சாலைகளில் உள்ள பள்ளங்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான பள்ளம், மேடுகளை கடந்து உயிரை பணயம் வைத்து பயணம் செய்ய வேண்டிய அவலநிலைக்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், மழைக்காலங்களில் இந்த பள்ளங்கள் காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இப்படி சென்னை மாநகர் பகுதியில் முக்கிய சாலைகள் பல சேதமடைந்துள்ளதால் காலை, மாலை நேரங்களில் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் சந்திக்க வேண்டியுள்ளது. சென்னை மாநகர சாலைகள் தான் அதிகாரிகளின் அலட்சியத்தால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், சென்னையில் துணை கோள் நகரம் என்று அறிவிக்கபட்ட மாமல்லபுரம் செல்லும் இசிஆர் சாலையும், தற்போது நடைபெறும் விரிவாக்கப் பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.

இ.சி.ஆர் சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கிழக்கு கடற்கரைச் சாலையில் மிக முக்கிய பகுதியாக, திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள 10 கிலோமீட்டர் தூர சாலை பார்க்கப்படுகிறது. இச்சாலையில் தற்போது நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் வாகனங்களுக்கு மேல் சென்று வருகின்றன.

குறிப்பாக, சென்னையில் இருந்து இசிஆர் சாலைக்கு செல்ல வேண்டுமானால் திருவான்மியூர் தான் இசிஆர் சாலையின் நுழைவுப் பகுதியாக உள்ளது. இங்கு சாலை மிக குறுகியதாக உள்ளதால் திருவான்மியூர் முதல் அக்கரை வரை உள்ள சாலையை கடப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரும் சவாலாக உள்ளது. பீக் அவர்ஸ்களில் 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை ஒரு மணி நேரத்தை கடந்தும் கடக்க முடியாமல் தினமும் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருவது தொடர் கதையாகவே உள்ளது. இதற்கு எப்போது தான் தீர்வு வரும் என்பது பொதுமக்களின் நீண்ட கால கனவாகவே இருந்து வருகிறது.

மாமல்லபுரம் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்து வருவதால் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் மாமல்லபுரம் செல்ல இசிஆர் சாலையை தான் பயன்படுத்துகின்றனர். இதனால் இசிஆர் சாலை எப்போதுமே கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுவதால், இந்த சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களால் அதற்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இசிஆர் சாலை விரிவாக்க திட்டத்தை கடந்த 2006ம் ஆண்டு தொடங்கிய போது திட்டத்தின் மதிப்பு ரூ.159 கோடியாக இருந்தது.

தற்போது 85 சதவீதம் உயர்ந்து ரூ.1100 கோடியாகியுள்ளது. அரசு நிதி ஒதுக்கியும், நிலம் கையகப்படுத்தும் குழுவின் தாசில்தார்கள், சர்வேயர்கள் அடிக்கடி இடம் மாற்றத்தில் செல்வதால், இழப்பீடு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் மந்த கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. கிட்டத்தட்ட 2006ல் தொடங்கிய பணிகள் 19 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் ஜவ்வாக இழுத்து கொண்டே செல்கிறது. இதற்கு அதிகாரிகளின் மெத்தனப்போக்கும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. 4 கட்டங்களாக நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணிகளில், தற்போது இசிஆர் சாலையின் நுழைவாயிலான திருவான்மியூரில் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதை பார்த்தால் இன்னும் எத்தனை காலம் தான் விரிவாக்கப் பணிகள் நடக்குமோ என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

திருவான்மியூர் முதல் ஆர்டிஓ அலுவலகம் உள்ள பகுதியில் இன்னும் நில எடுப்பு பணி முழுமையாக முடிவடையவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் கையகப்படுத்தப்பட்ட சில பகுதிகளில் மட்டும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் விரிவாக்கம் பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்படியே உள்ளது. எனவே, காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலை மக்கள் சந்திக்கின்றனர். 10 நிமிடத்தில் கடக்க வேண்டிய தூரத்தை சில மணி நேரங்கள் வரை கடக்க முடியாமல் தவிப்பது வாகன ஓட்டிகளுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். திருவான்மியூரை கடப்பதற்குள் ஒரு வழியாகிவிடுகின்றனர். ஊர்ந்து ஊர்ந்து செல்லும் நிலையே தொடர்வதால் மொத்தத்தில் திருவான்மியூரை கடப்பது என்பது வாகன ஓட்டிகளுக்கு சவாலானதாகவே உள்ளது.

குறிப்பாக, மழைநீர் வடிகால் பணி, மின்மாற்றிகள் அமைக்கும் பணி, அதற்காக மின் கேபிள்கள் புதைக்கும் பணி, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலையின் இருபுறமும் ராட்சத பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பணிகள் மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பாலவாக்கம் பகுதியில் ஜல்லிகள் கொட்டப்பட்டு பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால் பலர் கடைகள் போட்டு வியாபாரத்தையே தொடங்கி விட்டனர். விரிவாக்கம் நடக்கும் இடத்தில் ஏற்கனவே இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்டவை அகற்றும் பணிகளும் முடிவுக்கு வரவில்லை. ஒரு நாள் பணி நடந்தால் அடுத்து பல நாட்களுக்கு பின்னரே அந்த பணிகளை தொடர்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஏற்கனவே, இசிஆர் சாலை போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவிக்கும் நிலையில், விரிவாக்க பணியால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இப்படி இசிஆர் சாலை மட்டுமல்ல சென்னை மாநகர் முழுவதுமே பல்வேறு துறையினரால் நடைபெற்று வரும் பணிகளால் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளுக்கு சவாலை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • சாலைகள் சீரானால் நெரிசல் குறையும்
  • சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சென்னையில் பெருகி வரும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு காரணம். அதேநேரம், அதற்கு தேவையான சாலைகளை ஏற்படுத்துவது அரசின் கடமை. சென்னையில் சாலைகள் சீராக இருந்தால் போக்குவரத்து நெரிசலை ஓரளவு தவிர்க்க முடியும். ஆனால் தற்போது மெட்ரோ பணிகள், குடிநீர், மின்வாரிய பணிகள் என பல்வேறு காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்படுகின்றன.
  • அவ்வாறு தோண்டுவது தவறில்லை. ஆனால் சேதமடைந்த சாலைகள் முன்பு எப்படி இருந்ததோ அதேபோன்று உடனடியாக தரமான முறையில் சீரமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையினர் அவ்வாறு செய்யாததால் தான் இதுபோன்ற நிலை உருவாகிறது. குண்டும் குழியுமான சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். கடுமையான போக்குவரத்து நெரிசலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.
  • மழைக்காலங்களில் பள்ளங்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் புகார் அளிக்க ஏதுவாக ஒரு அமைப்பு அல்லது செயலி உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi