உடுமலை : பழுதடைந்த நிலையில் உள்ள சமுதாய நலக்கூடம், பயணிகள் நிழற்குடை,அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, பள்ளிகள் மற்றும் மாணவ மாணவியர் விடுதி உள்ளிட்டவற்றை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை மடத்துக்குளம் பகுதிகளிலும் அமராவதிஅணை, திருமூர்த்தி அணை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சமீபத்தில் கொழுமம் பகுதியில் சாவடி முன்பாக பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது சன் ஷேடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இது போன்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க, பருவமழை தீவிரமடையும் முன்பாக மாவட்டத்தில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள், சமுதாய நலக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு பழுதான நிலையிலோ இடிந்து விழும் அபாயத்திலோ இருக்கும் கட்டிடங்களை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.
மழைக்காலங்களில் போது பழுதடைந்த கட்டிடங்கள் இடிந்து விழக் கூடிய அபாய நிலை இருப்பதால் மழைக்காக ஒதுங்கும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.ஏற்கனவே தீயணைப்பு பேரிடர் துறை சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்தந்த அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் தங்கள் பகுதிகளில் உள்ள பாழடைந்த பழுதடைந்த கட்டிடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவற்றை இடித்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உடுமலை இல் உள்ள சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.