ராமேஸ்வரம்: பாம்பன் பாலத்தின் இணைப்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வாகனங்களில் டயர்களை பதம் பார்த்து வருகிறது. இதை சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனுக்கும் மண்டபத்திற்கும் இடையே கடல் பகுதியில் அன்னை இந்திரா காந்தி சாலை பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தில் தூண்களுக்கு இடையில் உள்ள சிமென்ட் கான்கிரீட் கர்டர்கள் மீது சாலை அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தின் மீது வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இடையிடையே இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங் பிளேட்கள் பொருத்தப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த பிளேட்கள் அவ்வப்போது சேதமடைந்து வாகனங்களின் டயர்களை பதம் பார்த்து வருகின்றன.
கடந்த ஆண்டு சாலை பாலத்தில் இரும்பு பிளேட்கள் சேதமடைந்தன. இதை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சரிசெய்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சாலை பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்கள் சேதமடைந்தன. வாகனங்கள் செல்லச் செல்ல அதிர்வு ஏற்பட்டு சேதமடைந்த பிளேட்களின் போல்ட் நட்டுகள் கழன்றுள்ளன. வெளியே தெரியும் கம்பி வாகனங்களின் டயர்களில் குத்தி பதம் பார்த்து வருகின்றன. சில நேரங்களில் விபத்துக்கும் வழி வகுக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். சேதமடைந்துள்ள இரும்பு ஸ்பிரிங் பிளேட்களை மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.