*விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?
கம்பம் : கம்பம், சுருளிப்பட்டி மற்றும் காமயகவுண்டன்பட்டி சாலையைச் சேதப்படுத்தும் வகையில் அனுமதியில்லாத கேஜ்வீல் பொருத்திய டிராக்டர் வண்டி ஓட்டிச்செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கடந்த ஜூலை மாதம் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக சாகுபடிக்கான நடவுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதில் சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, வீரப்பநாயக்கன்குளம், காமயகவுண்டன்பட்டி சாலைப் பகுதிகளில் உள்ள வயல்களில் நாற்று நடவுப்பணிக்காக விவசாயிகள் டிராக்டர் மூலம் சேற்று உழவு செய்து வருகின்றனர். இதற்காக டிராக்டர்களில் இரும்பினாலான பெரிய கேஜ்வீல்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த டிராக்டர் தார்ச்சாலையில் செல்லும் போது சாலை சேதமடைகிறது.
இதனால் விவசாய நிலங்களுக்குச் சென்று தான் டிராக்டர்களில் கேஜ்வீல் பொருத்த வேண்டும், கேஜ்வீல் பொருத்தி தார் ரோட்டில் செல்லக்கூடாது என்று வாடகைக்கு விடுபவர்கள் மற்றும் டிராக்டர் டிரைவர்களுக்கு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வயல்வெளிகள் நிறைந்த சுருளிப்பட்டிரோடு, காமயகவுண்டன்பட்டி ரோடு பகுதிகளிலும் அரசு சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டள்ளது.
ஆனால், அரசு உத்தரவை மதிக்காமல் சில டிராக்டர் டிரைவர்கள் கேஜ்வீலுடன் தார்ச்சாலையில் வண்டிகளை ஓட்டிச் செல்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் தார்ச்சாலை மிகவும் சேதமடைகின்றன. எனவே, சாலைகளை சேதம் விளைவிப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.