திருவனந்தபுரம்: கேரளாவில் இதுவரை தென்மேற்கு பருவ மழை 44 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 90 சதவீதம் மழை குறைந்துள்ளது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவில் வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் நீடிக்கும். இவ்வருடம் ஒரு சில நாட்கள் தாமதமாக பருவமழை தொடங்கியது. தொடங்கிய வேகத்தில் சில நாட்கள் கனமழை பெய்த போதிலும் பின்னர் மழையின் தீவிரம் குறைந்தது.
இதுவரை இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் பெருமளவு மழை குறைந்தது. இந்த மாதத்தில் மட்டும் வழக்கமாக பெய்வதை விட 60 சதவீதம் குறைவாகவே மழை பெய்தது. ஆனால் ஜூலை மாதத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மாதத்தில் 9 சதவீதம் மட்டுமே மழை குறைந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் மழை குறைந்தது. ஆகஸ்ட் 1 முதல் 15ம் தேதி வரை சராசரியாக 254.6 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 25.1 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது வழக்கமாக பெய்யும் மழையை விட 90 சதவீதம் குறைவாகும். கடந்த வருடம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தான் மிக அதிக மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை கேரளாவில் சராசரியாக 1556 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் 877.1 மிமீ மட்டுமே பெய்துள்ளது இது வழக்கமாக பெய்யும் மழையை விட 44 சதவீதம் குறைவாகும். தற்போதைய நிலவரப்படி அடுத்த இரு வாரங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதே நிலைமை நீடித்தால் கேரளாவில் கடும் வறட்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கேரளாவில் பெரும்பாலும் நீர் மின்சாரம் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. மழை குறைந்துள்ளதால் இடுக்கி உள்பட நீர் மின்சாரம் தயாரிக்கும் அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக மின்சார உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் கேரளாவில் மின் கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக கேரள மின்வாரியத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி தெரிவித்துள்ளார்.