புதுடெல்லி: அணைகளில் திடீரென தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த பொது நலன் மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் ரவி சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்ற தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் அணைகளில் திடீரென தண்ணீர் திறந்துவிடப்படுவதால் குறிப்பிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் தீபன்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் , “இதற்கு சட்டப்பூர்வ அதிகாரிகள் இருக்கின்றனர். நீங்கள் ஏன் அவர்களை அணுககூடாது? அணை நிரம்பினால் அதன் விளைவு என்ன தெரியுமா? இவை அனைத்தும் அறிவியல் ரீதியான பிரச்னைகள். சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மட்டுமே இதற்கு பதிலளிக்க முடியும். நீங்கள் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று விரிவாக தெரிவியுங்கள். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகின்றது ” என்று உத்தரவிட்டனர்.