திருப்போரூர்: திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட 24வது மாநாடு, திருப்போரூரில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. முதல் நாளான ஞாயிறன்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் தலைமையில் நடைபெற்ற மாநாட்டு துவக்க நிகழ்வில் கட்சியின் கொடியை மாவட்ட குழு உறுப்பினர் ஜி.மோகன் ஏற்றி வைத்தார். இதில், கட்சியின் மூத்த தலைவர் அ.சௌந்தர்ராஜன், மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட செயலாளர் பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், திருப்போரூர் பகுதி செயலாளர் எம்.செல்வம் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.
இந்த மாநாட்டில், வண்டலூர், மதுராந்தகம், செய்யூர் வட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கிட வேண்டும். பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும். பட்டியல் மற்றும் பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை மற்றும் குடல் சார்ந்த மருத்துவ பிரிவை உருவாக்க வேண்டும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணியை துரிதப்படுத்தி பூங்கா மற்றும் படகு குளம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், 31 பேர் கொண்ட மாவட்ட குழுவிற்கு மாவட்ட செயலாளராக பாரதி அண்ணா தேர்வு செய்யப்பட்டார். இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், க.சேஷாத்திரி, க.புருஷோத்தமன், க.பகத்சிங் தாஸ், எஸ்.ராஜா, எம்.செல்வம், எம்.கலைசெல்வி உள்ளிட்டோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.