*கற்பூரம் காட்டி வரவேற்பு
திருவையாறு : டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட கல்லணை தண்ணீல் திருவையாறு வந்தது. இந்த தண்ணீரை கற்பூரம் காட்டி மக்கள் வரவேற்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். பின்னர் தொடர்ந்து ஆறுகள், கிளை ஆறுகள், வாய்க்கால்கள் மூலம் சாகுபடி பணிகளுக்கு நீர் வழங்கப்பட்டு அறுவடை முடிவடைந்து ஜனவரி 28ம் தேதி அணை மூடப்படும்.
கர்நாடகா தமிழகத்திற்கு உரிய நீரை உரிய நேரத்தில் வழங்காத நிலையிலும் இயற்கையின் கருணையால் மழை பொழிந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் உள்ளது. இதனால் வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட நெல் சாகுபடிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.
வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 14ம்தேதி மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி காவிரி அன்னையை வரவேற்றனர்.
தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு 15ம்தேதி காலை வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீர் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிக்கு, காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் இருந்து தண்ணீரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம்தேதி மாலை திறந்து வைத்தார். காவிரி ஆறு திருக்காட்டுப்பள்ளி வழியாக திருவையாறுக்கு நேற்று மாலை வந்தடைந்தது.
திருவையாறு புஷ்யமண்டப படித்துறையில் பொதுமக்கள், பக்தர்கள், சிறியவர் முதல் முதியவர் வரை அனைவரும் காவிரி தண்ணீரை பூ தூவி, பால் ஊற்றி தொட்டு கும்பிட்டு வழிப்பட்டனர்.
மேலும், பக்தர்கள் தேவாரம் திருமுறைபாடி மஞ்சள், பால், அபிஷேகம் செய்து தீபாரதனை காண்பித்து வரவேற்றனர். தண்ணீரை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் ஆனந்தமடைந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் விளையாட தொடங்கினர்.