அணைக்கட்டு: அணைக்கட்டு அடுத்த அல்லேரிமலையில் பழுதடைந்த உறைவிட பள்ளி மதிய உணவுக்கூட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலையில் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு 45க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு மதிய உணவு வழங்க அருகே உள்ள சிமெண்ட் ஷீட் கட்டிடத்தில் உணவு சமைக்கப்படுகிறது. ஆனால் இந்த பழைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. எனவே இந்த கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும் என பொதுமக்கள் பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் பக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்திலும் மேற்பகுதி சிமெண்ட் பூச்சுக்கள் உதிர்ந்து விழுந்து வருகிறது. அதனை புதுப்பிக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ரேகா, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலர்களிடமும், அணைக்கட்டு பிடிஓக்களிடமும் மனு அளித்துள்ளார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லாததால், வேறு வழியின்றி அந்தக்கட்டிடத்திலேயே மாணவர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கட்டிடத்தின் சுவர்கள் சேதமாகியுள்ளது. இதனால் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பாழடைந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.