திருப்போரூர்: தாழம்பூரில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை அருகே தாழம்பூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பத்மா சேஷாத்ரி பாலபவன் மில்லினியம் பள்ளியின் கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக பள்ளி முதல்வர் ருக்மணிக்கு, மின் அஞ்சல் வந்திருப்பதாக தாழம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், கேளம்பாக்கம் போலீஸ் உதவி ஆணையர் வெங்கடேசன், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் பள்ளி தொடங்கும் முன்பே அங்கு சென்று மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், தாழம்பூர் பள்ளியில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்றும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி வழக்கம்போல் செயல்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.