தர்மசாலா: திபெத் ஆன்மிக தலைவரான தலாய் லாமா வருகிற 6ம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இதற்கான ஒரு வார கொண்டாட்டம் கடந்த 30ம் தேதி தர்மசாலாவிற்கு அருகில் உள்ள மெகலியோட்சிஞ்சில் தொடங்கி நடந்து வருகின்றது. இதனிடையே தற்போதைய தலாய் லாமாவிற்கு பிறகு 15வது தலாய் லாமாவை தேர்வு செய்யும் விவகாரத்தில் சீன தலையிடக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று தலாய் லாமா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘தலாய் லாமாவின் நிறுவனம் தொடரும் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். மேலும் எதிர்கால மறுபிறவியை(15வது தலாய் லாமா)அங்கீகரிக்கும் ஒரே அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு உள்ளது என்பதை இதன் மூலமாக மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.