சென்னை: தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு எளிதாக கறவை மாட்டுக் கடன் பெற்று வழங்க வழிவகை செய்தல், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக செயல்படுத்துதல், சுழற்சி பொருளாதாரம் (Waste to Wealth) மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்குண்டான நிதி ஆதாரங்கள் ஆகியவை குறித்து பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அவர்களின் பணித்திறனை மேம்படுத்தும் பொருட்டு 01.07.2025 முதல் 04.07.2025 வரை ஒரு நாள் பயிற்சியாக நான்கு குழுக்களுக்கு நான்கு நாட்கள் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.
தலைமையுரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர வங்கியுடன் இணைந்து பணியாற்றவும், பால் கூட்டுறவு சங்கங்களை பல் வகை சேவையுடன் நிலைத்த வளர்ச்சியுடன் கூடிய சங்கங்களாக மாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கிய பாலின் தரத்திற்கேற்றவாறு விலை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து, ஆவின் மூலம் கால்நடைத் தீவனம் வழங்கிட வேண்டும் என்றும். கலப்புத்தீவனம் வழங்கி பால் உற்பத்தியை பெருக்கிட வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.
இப்பயிற்சி வகுப்பில் ஆவின் பால் உப பொருட்கள், பால் பரிசோதனை கருவிகள் காட்சிபடுத்தப்பட்டது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன் பெற்று வழங்கும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக மாற்றி அச்சங்கங்களை இலாபகரமாக செயல்படவைப்பது. சுழற்சி பொருளாதாரம் (Waste to Wealth) மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்குண்டான நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 450 பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இப்பயிற்சியின் விளைவாக அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கறவைக்கடன் பெற்று வழங்குதல், அனைத்து சங்கங்களையும் இலாபகரமாக செயல்படவைத்தல், செயலற்ற சங்கங்களை புதுப்பித்தல், பால் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றி இலாபகரமாக செயல்படவைத்தல், இளைஞர்களை பால் உற்பத்தி தொழிலுக்கு ஈர்த்தல், சங்கங்கள் இல்லாத பகுதிகளில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்துதல், வறட்சிகாலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கால்நடைத் தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல், ஆவின் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் கிராம பொருளாதாரத்தை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அரசு செயலாளர் மருத்துவர் ந.சுப்பையன் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.