இஸ்லாமிய வாழ்வியல்
நண்பர் ஒருவர் கூர்மையான ஒரு கேள்வியை முன்வைத்தார்.
“மனிதனைப் படைத்தவன் இறைவன்; அவன் ஒருவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனையே வணங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இவையெல்லாம் சரிதான்; ஆனால் வழிபாடு எனும் எல்லையைத் தாண்டி மனித வாழ்வின் இதர துறைகளில் ஆண்டவன் மூக்கை நுழைக்க என்ன காரணம்? நம்முடைய அன்றாட வாழ்வில் ஆண்டவனுக்கு என்ன வேலை? எடுத்துக்காட்டாக, ஒரு பெண்ணுக்கு ஜீவனாம்சம் தரலாமா, யார் தருவது போன்ற பிரச்னையில்கூட மதத்தை வலிந்து இழுக்க வேண்டிய தேவை என்ன? இந்த அம்சம்தான் எனக்குப் புரிய மாட்டேன் என்கிறது” என்றார் நண்பர்.
“இந்தக் கேள்விக்கு விடை சொல்வதற்கு முன்பாக இஸ்லாமிய வாழ்வியலின் அடிப்படைகள் குறித்து நாம் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.”
“சொல்லுங்கள்.”
“இஸ்லாம் என்பது சில வழிபாடுகள், சடங்கு- சம்பிரதாயங்களின் தொகுப்பு அல்ல. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. மனித வாழ்வின் எல்லாத் துறைகளுக்கும் அது வழிகாட்டுகிறது. அந்த வழிகாட்டுதலின்படி வாழும்போதுதான் மனிதன் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை அடைய முடியும் என அது அழுத்தமாகக் கூறுகிறது. அதனால்தான் முஸ்லிம்கள் சின்னச் சின்ன பிரச்னைகளில்கூட மார்க்கம் என்ன கூறுகிறது என்று பார்க்கிறார்கள்.”
“வாழ்வின் எல்லாத் துறைகளுக்குமா இஸ்லாம் வழிகாட்டுகிறது?”- நண்பரின் குரலில் வியப்பு.
“ஆமாம் நண்பரே. அடுக்களை முதல் ஆட்சிபீடம் வரை; பள்ளிக்கூடம் முதல் பள்ளிவாசல் வரை; பஞ்சாயத்துப் பிரச்சினை முதல் பன்னாட்டுச் சிக்கல் வரை; குழந்தை பிறப்பு முதல் இறுதிச் சடங்கு வரை; மனிதநேயம் முதல் மனித உரிமை வரை; ஆன்மிகம் முதல் அறிவியல் வரை, பொருளியல் முதல் குடும்பவியல் வரை, போர்க்களம் முதல் சமாதானம் வரை அது தொடாத துறை இல்லை, காட்டாத வழிமுறையும் இல்லை.”
“நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இஸ்லாம் என்பது தொழுகை, நோன்போடு நின்றுவிடும் மதம் அல்ல, அப்படித்தானே?”
“சரியாகச் சொன்னீர்கள். இறைவன் மிகவும் கருணைமிக்கவன். அதனால்தான் படைத்ததோடு தன் பணி முடிந்துவிட்டது, இனி மனிதன் எக்கேடு கெட்டாவது போகட்டும் என்று விட்டுவிடாமல் வேதங்களையும் தூதர்களையும் அனுப்பித் தொடர்ந்து நமக்கு வழிகாட்டுதல்கள் வழங்கிக்கொண்டே இருந்தான். அந்த வரிசையில் இறுதியாக அருளப்பட்ட வேதம்தான் குர்ஆன். இறுதியாக வந்த இறைத்தூதர்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.”
“திருக்குர்ஆனின் செயல்வடிவமாக நபிகளார் வாழ்ந்துகாட்டினார். அந்த வழிமுறையைத்தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும். சரியா?”
“மிகச் சரி. இப்போது நீங்களே சொல்லுங்கள். அன்றாட வாழ்வில் ஆண்டவன் தலையிடுவது தவறா?”
“தவறே இல்லை. அவன் தலையிட்டு வழிகாட்டினால்தான் நம் வாழ்க்கை சீராக அமையும்.” நண்பர் விடைபெற்றார்.
– சிராஜுல்ஹஸன்
இந்த வாரச் சிந்தனை
“இது (குர்ஆன்) இறைவனின் வேதமாகும். இதில் யாதொரு ஐயமும் இல்லை. இறையச்சமுடையோர்க்கு இது சீரிய வழிகாட்டியாகும்.” (குர்ஆன் 2:2)