சென்னை: மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. மலேசிய நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது பினாங்கு தீவு. மலேசியாவில் உள்ள பல்வேறு தீவுகளில் பினாங்குத் தீவு மிகப்பெரிய தீவு. இங்கு வசிப்பவர்களில் பெருமளவு இருப்பவர்கள் தமிழர்கள். பினாங்கு தீவில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. பினாங்கு தீவிற்கு, கோலாலம்பூர், சிங்கப்பூர், தாய்லாந்து, சீயோல், துபாய், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள், அதிகமாக வசிக்கும் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ்நாட்டிலிருந்து குறிப்பாக, சென்னையில் இருந்து பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் தொடங்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வந்தன.
ஆனால் இந்திய விமான நிலைய ஆணையம் அதற்கான அனுமதியை வழங்காமல் தாமதப்படுத்தியதால் பினாங்கிற்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழ் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் இந்திய விமான நிலைய ஆணையம் பினாங்கிற்கு நேரடி விமான சேவைகள் இந்தியாவில் இருந்து தொடங்க அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து சென்னையில் இருந்து, வருகிற டிசம்பர் 21ம் தேதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பினாங்கிற்கு நேரடி தினசரி விமானத்தை இயக்குகிறது.
டிசம்பர் 21 சனிக்கிழமை முதல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலையில் பினாங்கு தீவு சென்றடைகிறது. அதன் பின்பு பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலை 10.35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறது. இந்த விமானம் சுமார் 180 பேருக்கு மேல் பயணிக்க கூடிய ஏர் பஸ் 320 ரகத்தை சேர்ந்தது. சென்னை-பினாங்கு இடையே பயண நேரம் சுமார் 4 மணி 30 நிமிடங்கள் ஆகும். தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பினாங்கிற்கு நேரடி தினசரி விமான சேவை சென்னை விமான நிலையத்தில் இருந்து தொடங்குவது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.