Friday, March 29, 2024
Home » தஹிக்கு நஹி சொன்ன தமிழ்நாட்டுக்கு அமுல் மூலம் ‘தூத்’ விற்க திட்டமா? ஆவின் நிறுவனத்தை முடக்கும் சதியா?

தஹிக்கு நஹி சொன்ன தமிழ்நாட்டுக்கு அமுல் மூலம் ‘தூத்’ விற்க திட்டமா? ஆவின் நிறுவனத்தை முடக்கும் சதியா?

by Karthik Yash

* குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் விற்பனையை தொடங்குவதற்கு எதிர்ப்பு
* பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை
* கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு
* கிராம பொருளாதாரத்தை அடியோடு அழிக்கும் செயல் என குற்றச்சாட்டு

ஆவினில் தயிர் பெயரை ‘தஹி’ என்று மாற்றுவதற்கு ‘நஹி’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய வழியில் குஜராத்தின் அமுல் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் அமுல் பால் (தூத்) தொழில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலை நீடித்தால் கிராம பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு லிமிடெட்
(TCMPF) 1.2.1981ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

இது ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது. ஆவின் நிறுவனம் தலைமை கூட்டுறவு விற்பனை இணையமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில், ஆவின் கூட்டுறவு இணையத்தின் கீழ், 9,673 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அச்சங்கங்கள் நாளொன்றுக்கு 35 லட்சம் லிட்டர் பாலினை 4.5 லட்சம் உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது. அதை இந்த ஆண்டு 70 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் வாயிலாக, பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் லாபகரமான மற்றும் சீரான விலை கூட்டுறவு சங்கங்களால் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவனம் நீல நிறம், பிங்க் நிறம், பச்சை நிறம், ஆரஞ்சு நிறம் என்று 4 வகையான பால்களை விற்பனை செய்து வருகிறது. ஆவின் பாலுக்கும், தனியார் பாலுக்கும் லிட்டருக்கு ரூ.20 வரை வித்தியாசம் இருக்கிறது. அதாவது தனியார் பாலை விட ஆவின் பால், ரூ.20 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை மாநகர மக்களில் 99 சதவீதத்தினர் ஆவின் பாலையே நம்பியுள்ளனர். இதனால் ஆவின் பாலுக்கு தேவை அதிகமாக உள்ளது. மேல் தட்டு மக்கள் முதல், அடித்தட்டு மக்கள் வரை ஆவின் பாலை வாங்கும் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதற்கு, விலை குறைவு மட்டுமல்லாமல், தரமும், முறையான தயாரிப்பும் காரணமாக உள்ளது. இதனால் மக்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கையை ஆவின் பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் அமுல் பாலை விற்பனை செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக குஜராத் சொசைட்டியின் கீழ் இயங்கக்கூடிய அமுல் நிறுவனம், தமிழகத்தில் வந்து பால் கொள்முதல் செய்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பால் குளிரூட்டும் மையம் மற்றும் பதப்படுத்தப்படும் நிலையம் நிறுவியுள்ளது. மேலும் தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள், சுய உதவி குழுக்கள் மூலமாக பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமுல் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதிக விலை கொடுத்து வாங்கினால் அதிக விலைக்கு தான் விற்க வேண்டும். குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விலையை உயர்த்தி விற்பார்கள். அதையும் வாங்க பலர் உள்ளனர். லாபம் அதிகரிக்கும்போது அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றனர். இதனால் அமுலை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் போக ஆரம்பிப்பார்கள். இங்குள்ள கூட்டுறவு சொசைட்டிகள் அழிவுக்கு இது காரணமாகி விடும். மேலும், பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாடு அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மாடு வாங்க சலுகைகள் வழங்குகின்றன.

பல நலத்திட்டங்கள் வழங்கும்போது மாடுகளையும் இலவசமாக வழங்குகின்றனர். ஆனால் அரசின் சலுகையால் பெறப்படும் கறவை மாடுகள் மூலம் வரும் பால் அமுலுக்கு செல்லும் நிலை உருவாகும். இதுவும் கூட்டுறவு சொசைட்டிகளின் அழிவுக்கு ஒரு காரணமாகி விடும். அதேநேரத்தில் பால் கொள்முதலை அதிக விலை கொடுத்து வாங்கினாலும், குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மை என்பது தான் ஆவினின் கொள்கை. அந்த எண்ணமே முற்றிலும் பாதிக்கப்படும். அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2, ரூ.4 என்று அதிகம் கொடுத்து பாலை கொள்முதல் செய்வதாக சொல்கிறார்கள்.

இதனால் பால் கொள்முதல் செய்பவர்கள் அவர்கள் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் எந்த லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றி வரும் ஆவின் சேவை என்பது மிகவும் பாதிக்கப்படும். அப்படி செயல்படும் பட்சத்தில் ஆவின் நிறுவனம் அழிவை சந்திக்கும். அவ்வாறு ஆவின் நிறுவனம் அழிந்தால், குறைந்த விலைக்கு பால் கிடைக்காது. இதனால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் மற்ற மாவட்டங்களில் பால் விற்பனை பாதிக்கும். மற்ற மாவட்டங்களில் கொள்முதல் பாதித்தால் அங்கும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால் மாநிலங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மக்களுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் மற்ற மாநிலங்களில் தொடங்கக் கூடாது என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் அந்த கோட்பாட்டை மீறி, குஜராத் நிறுவனம் தமிழகத்தில் கால் பதித்துள்ளது. இது தமிழகத்தின் கிராம பொருளாதாரத்தை முற்றிலும் அழித்து விடும் செயல் என்பதால் பல்வேறு எதிர்க்கட்சிகள் இதை கண்டித்து வருகின்றனர். ஆவின் தயிர் பாக்கெட்டில் தயிர் என்ற வார்த்தையும், curd என்ற ஆங்கில வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.

இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு ‘தஹி’ என்ற இந்தி வார்த்தையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் முதல் பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தஹிக்கு ‘நஹி’ என்று கூறி விட்டது. இதனால், நீங்கள் ஆவின் மூலம் பெயர் போடாவிட்டால் என்ன? குஜராத்தில் தயாரிக்கப்படும் அமுலை கொண்டு வந்து இந்தியில் பெயரிட்டு நாங்கள் விற்பனை செய்வோம் என்று மறைமுகமாக இதுபோன்ற செயல்களில் குஜராத் நிறுவனம் இயக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவ்வாறு தமிழக அரசும், மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஒவ்வொன்றையும், வேறு ஒரு திட்டம் அல்லது செயல் மூலம் மாற்று வழியில் ஒன்றிய அரசு செயல்படுத்துவதாகவும் அதற்கு சில ஆசை வார்த்தைகளை கூறியவுடன் ஒரு சிலர் தடம் மாறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இவ்வாறு ஒன்று ஒன்றாக தமிழ்நாட்டில் கொண்டுவர பார்க்கிறார்கள். இது முடியாத காரியத்தால், தமிழகத்தில் இருப்பதை எல்லாம் இல்லாமல் ஆக்கும் வகையிலான நடவடிக்கைளில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழக ஆவின் நிறுவன ஊழியர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் அமுல் கொண்டுவரப்படுகிறதா என்ற சந்தேகம் நிறைய பேர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இந்த மாதிரி கூட்டுறவு சொசைட்டி தான். சிறிய, சிறிய சொசைட்டிகள். இதை உடைத்து விட்டோம் என்றால், கிராமப்புற பொருளாதாரம் அடி வாங்கும் என்று நினைத்து செயல்படுகிறார்கள். கர்நாடகாவில் அமுலுக்கு எதிர்ப்பு வந்தது. அங்கு அரசு சார்பில் நந்தினி பால் விற்கப்படுகிறது.

அந்த பால் மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அமுல் விற்பனையை தொடங்கியதால் அங்கு எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் இதை தேர்தல் பிரசாரமாகவே செய்தார்கள். இதனால் மக்கள் பாஜவை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். இதனால், தற்போது அமுல் பால் கர்நாடகாவிலும் நுழைய முடியாத சூழ்நிலை உள்ளது. கர்நாடகவில் எதிர்ப்பு கிளம்பியதால் தமிழகத்தில் நுழைய பார்க்கிறார்கள். தமிழகத்தில் ஒரு சிலர் 2 ரூபாய்க்கு ஆசைப்படுவதால் கிராம பொருளாதாரம் மிகவும் அழியக்கூடிய நிலை ஏற்படும். தமிழக பால் உற்பத்தியாளர்களும் ஆசை காட்டும் அமுலின் திட்டத்தை தகர்த்து தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவினை வளப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.2, ரூ.4 என்று அதிகம் கொடுத்து பாலை கொள்முதல் செய்வதாக சொல்கிறார்கள். இதனால் பால் கொள்முதல் செய்பவர்கள் அவர்கள் பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் எந்த லாப நோக்கம் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்றி வரும் ஆவின் சேவை என்பது மிகவும் பாதிக்கப்படும். அமுல் உற்பத்தியாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதிக விலை கொடுத்து வாங்கினால் அதிக விலைக்கு தான் விற்க வேண்டும். குறைந்தது ரூ.10 முதல் ரூ.20 வரை விலையை உயர்த்தி விற்பார்கள். அதையும் வாங்க பலர் உள்ளனர். லாபம் அதிகரிக்கும்போது அதிக விலை கொடுத்து பாலை கொள்முதல் செய்கின்றனர். இதனால் அமுலை நோக்கி பால் உற்பத்தியாளர்கள் போக ஆரம்பிப்பார்கள். இங்குள்ள கூட்டுறவு சொசைட்டிகள் அழிவுக்கு இது காரணமாகி விடும்.

ஆவின் பால் விற்பனை
வருடம் விற்பனை
(லிட்டர்)
2018 22.74 லட்சம்
2019-2020 23.08 லட்சம்
2020-21 24.30 லட்சம்
2021-2022 26.41 லட்சம்
2022-2023 30.01 லட்சம்

பால் விலை பட்டியல்
பால்வகை ஆவின் தனியார்
1. நீலநிற பாக்கெட்(லிட்டர்) ரூ.40 ரூ.54
2. பச்சை நிற பாக்கெட் ரூ.44 ரூ.66
3. ஆரஞ்ச் நிற பாக்கெட் ரூ.60 ரூ.74

* ஆவின் என்றால் அதிக நம்பிக்கை
வியாபாரிகள் கூறுகையில், ‘‘மக்கள் முழுக்க முழுக்க நம்புவது ஆவின் பாலை தான். ஆவின் மீது மக்கள் அபார நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் குறைவான விலை, தரம் அதிகம், செல்வந்தர்கள் கூட ஆவினை விரும்பி வாங்குகிறார்கள். தனியாரை விட ஆவின் தரம் நன்றாக இருக்கும். இந்நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக்கியிருக்கிறது. அதனால், தான் இன்றைக்கு ஆவின் பால் மீதும், தயிர் மீதும், நெய் உள்ளிட்ட ஆவின் தயாரிப்புகள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. மேலும் பொதுமக்களிடம் தேவையும் அதிகமாக உள்ளது. ஆவின் தயாரிப்பு முழுவதும் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் விரைவில் விற்று போகும் நிலை உள்ளது. அதே நேரத்தில் லாப நோக்கம் இல்லாமல் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச்சத்தினை பூர்த்தி செய்வதிலும் ஆவின் முக்கிய பங்காற்றி வருகிறது’’ என்றனர்.

* கொரோனா கால சேவை
கொரோனா காலத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். அதனால், கடைகள் கூட திறக்கப்படவில்லை. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர பயந்தார்கள். அந்த நேரத்தில் கூட நமது ஆவின் நிறுவனம் மட்டுமே இயங்கி வந்தது. தனியார் பால் நிறுவனங்கள் பயத்தில் மூடப்பட்டு விட்டன. ஆவின் நிறுவனம் மட்டும் கிராமம், கிராமமாக, தெரு, தெருவாக, வீடு, வீடாக சென்று மக்களிடம் பாலை விநியோகித்தனர். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால் தனியார் நிறுவனம் போல அமுலும் மூடப்படும். அப்படி நிலை வந்தால் பாலுக்காக மக்கள் ஏங்கும் சூழ்நிலை உருவாகும் என்றும் ஆவின் ஊழியர்கள் எச்சரிக்கின்றனர். ஆவின் என்றால், நம்பிக்கை, சேவை, கிராம பொருளாதாரம், ஏழைகளின் தேவாமிர்தம், தரம் என்று அழைக்கலாம். ஆவின் அழிக்கப்பட்டால், அமுல் மூலம் தஹி வந்து, மேலே சொன்ன எல்லா நல்ல செயல்களும் தமிழகத்தில் நஹி(இல்லை) என்ற நிலை உருவாகிவிடும்.

You may also like

Leave a Comment

twelve − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi