பேரையூர்: டி.கல்லுப்பட்டி அருகே, கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வெள்ளத்தில் 6 சப்பரங்கள் பவனி வரும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில், 7 கிராமங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, தேவன்குறிச்சி, வன்னிவேலம்பட்டி, கிளாங்குளம், வி.சத்திரப்பட்டி, வி.அம்மாபட்டி, மேலக்காடனேரி ஆகிய 7 ஊர்களில் முத்தாலம்மன் கோயில்கள் உள்ளன. இந்த ஊர்களில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெறும். இதையொட்டி வி.அம்மாபட்டியில் முத்தாலம்மன் சிலைகள் செய்து மற்ற ஊர்களுக்கு அனுப்பும் வைபவம் சிறப்பாக நடைபெறும். இதன்படி இந்தாண்டு திருவிழா 7 ஊர்களிலும் நேற்று தொடங்கியது.
இதையொட்டி 7 ஊர்களுக்கான முத்தாலம்மன் சிலைகள் வி.அம்மாபட்டி கண்மாய்க்கரையில் செய்யப்பட்டன. தாய்க் கிராமமான வி.அம்மாபட்டியை தவிர்த்து 6 ஊர்களிலிருந்து அம்மன் சிலைகளை எடுத்துச் செல்லும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி 6 ஊர்களில் இருந்தும் சப்பரங்கள் ஊர்வலமாக வி.அம்மாபட்டிக்கு இன்று காலை வருகை தந்தன. அதன்பின் கண்மாய்க் கரையில் 7 முத்தாலம்மன் சிலைகளுக்கும் கண் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து முத்தாலம்மன் சிலைகளை அவரவர் ஊர்களுக்கு எடுத்துச் சென்றனர். சாமி சிலைகளுக்கு பின்னால் சப்பரங்கள் ஊர்வலமாக சென்றன. இதில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மக்கள் வெள்ளத்தில் 6 சப்பரங்களும் ஒன்றன் பின் ஒன்றாக செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
இன்று மதியம் 6 ஊர்களில் முத்தாலம்மனுக்கு கிடா வெட்டி சாமி கும்பிடுவர். நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறும். போக்குவரத்து மாற்றம்: இதையொட்டி இன்று காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திருமங்கலம்-ராஜபாளையம் சாலையில் செல்லும் தொலைதூர பஸ்கள், டவுன் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் புதுப்பட்டி அருகே அப்பக்கரை, தொட்டியபட்டி வழியாக மங்கல்ரேவு, பேரையூர், பைபாஸ் சாலை, எம்.சுப்புலாபுரம் வழியாக மாற்றிவிடப்பட்டது. இதையொட்டி பேரையூர் டிஎஸ்பி துர்காதேவி தலைமையிலான 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சப்பரங்கள் செல்வதால் சாலையின் குறுக்கே செல்லும் மின்வயர்கள் தற்காலிகமாக அகற்றப்பட்டு, அப்பகுதியில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.