கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் டி.ஜெ.எஸ்., பப்ளிக் பள்ளி மாணவர்கள், 175 பேர் 5 நிமிடம், 40 விநாடிகள் பர்வதாசனத்தில் நின்று உலக சாதனை படைத்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் பகுதியில் டி.ஜெ.எஸ்., பப்ளிக் (சி.பி.எஸ்.இ) பள்ளியில் யோகா பயிலும் மாணவர்களின் உலக சாதனை நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்வில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும் டி.ஜெ.எஸ். கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன் வரவேற்றார். இதில், நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், துணைத்தலைவர் டி.ஜெ.தேசமுத்து, ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, சிறப்பு விருந்தினரான வட சென்னை எம்பி கலாநிதி வீராசாமி, டி.ஜெ.எஸ். (சிபிஎஸ்இ) மாணவ, மாணவிகள் 175 பேர் கலந்துகொண்ட யோகாசன போட்டிகளை பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார். இதில் 5 நிமிடம், 40 விநாடிகள், பர்வதாசனம் யோகாசனத்தில் நின்று மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை, இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்தது. பின்னர் நிறைவு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் கலாநிதி வீராசாமி எம்பி., எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான உலக சாதனை பட்டயங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர். அப்போது, பள்ளி நிர்வாகம் மற்றும் யோகா பயிற்சியாளர் சந்தியாவுக்கான பாராட்டு சான்றுகளை, இன்டர்நேஷனல் யோகா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ தீர்ப்பாளர் சிந்துஜா வினித் வழங்கினார். நிகழ்வின் முடிவில் பள்ளியின் முதல்வர் அசோக் நன்றி தெரிவித்தார்.