நிக்கோசியா: பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகவும் வெகு விரைவில், உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற முத்திரையை பதிக்கும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளித்தார். அதைத் தொடர்ந்து அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.நேற்று சைப்ரஸ் தலைமை செயல் அதிகாரிகளின் மன்ற கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா சைப்ரஸ் இடையேயான பரஸ்பர வர்த்தகம் 150 மில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது என்றார்.
வெகு விரைவில், உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்த பிரதமர் மோடி, பாஜக 3வது முறையாக வெற்றி பெற்ற பின்னர், இந்தியாவில் மின்னணு புரட்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக பேசிய மோடி, “கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு புரட்சி ஏற்பட்டுள்ளது. நிதி உள்ளடக்கம், இதற்கு ஒரு முன்னுதாரணமாக மாறி உள்ளது. தற்போது, உலகில் நடைபெறும் மின்னணு பரிவர்த்தனைகளில் 50% அளவுக்கு இந்தியாவில்தான் நடைபெறுகின்றன. இது, யு.பி.ஐ. மூலமாக நடைபெறுகிறது.”இவ்வாறு தெரிவித்தார். அரசு முறை பயணமாக சைப்ரஸ் சென்றுள்ள மோடி, 23 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு சென்றுள்ள இந்திய பிரதமர் ஆவார். இன்று அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து பிரதமர் மோடியும், சைப்ரஸ் நாட்டின் அதிபரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.