கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வெடிவிபத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும்,15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதியாக, சிப்காட் நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி நியமித்து, மாவட்ட ஆட்சியர் சரயு உத்தரவிட்டுள்ளார்.
நியமனம் செய்யப்பட்ட 30 நிமிடங்களுக்குள், சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வெடி விபத்து நடந்த இடத்தின் அருகே உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள், கடைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டவர்களிடம் விபத்து தொடர்பாக கேட்டறிந்து, அதனை எழுத்துபூர்வமாக பதிவு செய்தனர். இதனிடையே கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதாக தடயவியல் அறிக்கை கூறுவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்தது.
அதிமுக எம்பி தம்பிதுரை கிருஷ்ணகிரி வெடி விபத்து பற்றி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். கிருஷ்ணகிரியில் கேஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை என ஒன்றிய பெட்ரோலிய துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். மாநில அரசு விசாரணையில் கேஸ் சிலிண்டர் வெடிப்பு என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் வெடித்தே பட்டாசு கடையில் வெடிவிபத்துக்கு காரணம். ஆய்வுக்கு பின் அமைச்சர் சக்கரபாணியும் சிலிண்டர் வெடித்தே விபத்து நேர்ந்ததாக கூறினார்.