சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல காற்று சுழற்சி தென்மேற்கு பருவக்காற்றை இழுப்பதால், தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் 16ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள வளி மண்டல காற்று சுழற்சி ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில், நேற்று முதல் வட மேற்கு வெப்ப நீராவியும் மேற்கு திசையில் இருந்து வீசும் குளிர் காற்றும் (குளிர்விக்கும் காற்றும்) இணைந்து, கிழக்கு காற்றும் சேர்ந்து வட கடலோரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் நேற்று மாலையில் மழை பெய்தது.
இன்று இரவில் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதன் தொடர்ச்சியாக 10ம் தேதி அதிகாலையில் கோடியக்கரை பகுதியில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதற்கு பிறகு அன்று மாலை பரப்பில் அதிகரித்து பெய்யும். அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் இணைந்து பெய்யும். இது தவிர வங்கக் கடல் காற்று சுழற்சி ஒடிசா கரையோரம் வந்து தென்மேற்கு பருவக் காற்றை ஈர்க்கும். படிப்படியாக அது அதிகரித்து தமிழ்நாட்டின் ஊடாக பயணிக்கும். குறிப்பாக வடமேற்கு வெப்ப நீராவியும், தென்மேற்கு பருவக் காற்றும் கிழக்கு காற்றும் சேர்ந்து நல்ல மழை பெய்யும் வாய்ப்பை உருவாக்கும். காற்று வீசும் பகுதிகளில் சிறிது மழை குறைவாக பெய்யும்.
மேலும், 11ம் தேதி டெல்டாவிலும் 12ம் தேதி அங்கு அதிகரித்து பெய்யும். தலைஞாயிறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, கடலூர், சிதம்பரம் பகுதிகளில் 12ம் தேதியில் நல்ல மழை பெய்யும். 13ம் தேதியும் பரப்பில் அதிகரித்து மாலையில் இரவில் நல்ல மழை பெய்யும். தமிழ்நாடு முழவதும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை தென் மேற்கு பருவக் காற்று நுழைந்து வெப்பநிலையை தணித்து மழை பெய்யத் தொடங்கும். மலைப் பகுதிகளில் மிக கனமழை பெய்யும். வங்கக் கடலில் உருவகியுள்ள நிகழ்வு 16ம் தேதிக்கு பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து மகாராஷ்ட்ரா பகுதிக்கு செல்லும் என்பதால் 17ம் தேதிக்கு பிறகு கேரளாவில் இருந்து காற்று ஆந்திரா வழியாக நுழைந்து வட மேற்கு திசையில் பயணிக்கும். அதற்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மட்டும் மழை பெய்யும்.
அதற்கு பிறகு படிப்படியாக மழை குறையும். குறிப்பாக 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும். இதையடுத்து 20ம் தேதியில் வங்கக்கடலில் மேலும் ஒரு வளி மண்டல காற்று சுழற்சி உருவாகி ஒடிசா பகுதிக்கு நெருங்கி வந்து தென்மேற்கு பருவக் காற்றை இழுந்து மேலும் மழை பெய்யத்தொடங்கும். அதன் காரணமாக காவிரி மழைப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அதிகபட்மாக வேலூரில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. ஈரோடு, திருச்சி 102 டிகிரி, சென்னை 101 டிகிரி, திருத்தணி, தஞ்சாவூர், பரங்கிப்பேட்டை, கரூர், புதுச்சேரியில் 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று 9 மாவட்டங்களில் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்யும்.
மேலும் 10ம் தேதியில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். 11ம் தேதியில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 13ம் தேதி வரை நீடிக்கும். இந்நிலையில், தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும். தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரையில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.