சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஹாமூன் புயல், மிக தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது ஓடிசாவின் பாரதீப்புக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும், மேற்குவங்கத்தின் டிக்காவுக்கு தெற்கு-தென்கிழக்கில் 270 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஹாமூன் புயலாக வலுப்பெற்று, இன்று தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே நாளை மாலை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர ‘தேஜ்’ புயல் இன்று காலை தெற்கு அல்-கைதாக்கு மிக அருகில் ஏமன் கடற்கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது