சென்னை: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையை கடக்கிறது. இதனால் சென்னையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கிண்டி, அடையாறு, ஆலந்தூர், வேளச்சேரி, தரமணி, திருவானியூர்,மந்தைவெளி, மயிலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழுந்துள்ளது. சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.
ஏற்கென இண்டிகோ விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சில வானத்தில் நீண்ட நேரம் வட்டமடித்துக்கொண்டிருந்தன. இந்த நிலையில் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புயல், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் 12 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விமான சேவை ரத்து மற்றும் தாமதம் காரணமாக பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.