சென்னை: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் தாக்குதலால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. சூறாவாளிக் காற்றுடன் வரலாறு காணாத மழை பெய்ததால் பல்வேறு கிராமங்கள், குடியிருப்புகள் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்தன. விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 51 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருந்து மேற்கு திசை நோக்கி நகர்ந்தது. முன்னதாக பெஞ்சல் புயல் சூறாவளி காற்றுடன் நிலப்பரப்பை எட்டிய நிலையில் அது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு அருகில் கரையை கடப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதலில் முனைப்பகுதியும் அடுத்து மையப்பகுதியான கண் பகுதியும் இறுதியில் வால் பகுதியும் அடுத்தடுத்து கடந்தது.
புயலின் கண் பகுதி மையம் கொண்ட புதுச்சேரியில் புயல் கரையை கடந்தபோது மணிக்கு 60 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. அப்போது கனமழை கொட்டியதால் முன்னெச்சரிக்கையாக நகரம் முழுவதும் மின் விநியோகம் அடியோடு நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் காலை 8.30 முதல் நேற்று அதிகாலை 5.30 மணி வரை 49 செமீ அளவுக்கு மழை பதிவானது. வரலாறு காணாத இந்த மழையால் புதுச்சேரி ஒயிட் டவுன், அண்ணா நகர், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கினர். நகர பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் மேல்தளத்தில் தஞ்சம் அடைந்தனர். வீடுகளில் தவித்தவர்களை ேதசிய பேரிடர் மீட்பு குழு, ஆப்த மித்ரா குழுவினர் மீட்டு முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம் இரவு முதல் சூறைக்காற்று வீசியதால், லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மற்றும் லாஸ்பேட்டையில் உள்ள சீகல்ஸ் கன்வென்ஷன் சென்டர் ஆகிய பகுதிகளில் மதில்சுவர் இடிந்து விழுந்தது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 25க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் சரிந்தன. இதேபோல் இசிஆரில் மாநில அவசர கட்டுப்பாட்டு அறையை மழைநீர் சூழ்ந்தது. சூறைக்காற்றால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. புதுச்சேரியில் பெஞ்சல் புயலையொட்டி மேஜர் அஜய்சங்வான் தலைமையில் 70 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் படகில் சென்று நூற்றுக்கணக்கான மக்களை மீட்டு அருகில் உள்ள நிவாரணமுகாம்கள், சமுதாய நலக்கூடங்களில் தங்க வைத்தனர். மேலும் நடக்க முடியாத மாறுத்திறனாளிகள், முதியோர்களை தூக்கி வந்து படகில் ஏற்றி மீட்டு வந்தனர்.
முதல்மாடியில் சிக்கி கொண்டவர்களுக்கு பிஸ்கட், பால், பிரட்டுகளை வழங்கினர். பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், காவல்துறை இணைந்து இதுவரை மழை, வெள்ளத்தில் சிக்கிய 551 பேரை மீட்டுள்ளனர். தமிழக அரசின் விரைவுபேருந்துகள் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் பணிமனை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதில் 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் மழைவெள்ளத்தில் மூழ்கியது.
சங்கராபரணி, தென் பெண்ணையாறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. சங்கராபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கணுவாப்பேட்டையில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் தத்தளித்த குடும்பத்தினரை பேரிடர் மீட்பு குழு மீட்டது. 6 மாடுகளை வெள்ளம் இழுத்து சென்றது. இதில் 2 மாடுகள் மீட்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் ஆரியப்பாளையத்தில் உள்ள ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. புதிய பாலம் திறப்பட்டுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. கனமழை காரணமாக புதுச்சேரியில் செல்போன், இணையதள சேவை முடங்கியது. திரையரங்குகளி அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 48 மணி நேரம் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டு, பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியது. இயல்புநிலை திரும்ப ஓரிரு நாட்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 80 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசியதோடு இரவில் புயல் கோரத்தாண்டவம் ஆடியதால் வெள்ளக்காடாக மாறியது. இதேபோல் புயல் கரையை கடந்த பிறகும் காற்றின் தாக்கம் குறையாமல் மழை கொட்டித் தீர்த்தது.
நேற்று மாலை 6 மணி வரை இதே நிலை நீடித்தது. சுமார் 48 மணி நேரத்திற்கு இந்த கனமழை இடைவிடாமல் கொட்டி தீர்த்ததால் விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம், செஞ்சி, மயிலம், மரக்காணம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. குறிப்பாக மயிலத்தில் 51 செ.மீ, திண்டிவனத்தில் 37 செ.மீ, விழுப்புரம் 27 செ.மீ, செஞ்சி 25 செ.மீ மழை பதிவானது. ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பின. வீடூர் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை மழை தொடங்கி 5 மணி நேரத்திலே எட்டியதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகுந்தது.
இதனால் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியது. தொடர் மழை காரணமாக 23 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. உடனடியாக காவல், தீயணைப்புத்துறையினர் அதனை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இதுபோல் 52 இடங்களில் மின் கம்பங்கள், ஒயர்கள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் தடைப்பட்டது. கிராமங்கள் இருளில் மூழ்கின. குடிநீர் விநியோகமும் தடைபட்டது. மேலும் 60 இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இந்த பகுதிகளில் 21 தற்காலிக நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்து சுமார் 1,500 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.
11 இடங்களில் சுவர் இடிந்து விழுந்த நிலையில் செஞ்சி வட்டத்திலும் 43 பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. திண்டிவனம்- புதுச்சேரி பைபாஸ் சாலையை மழைவெள்ளம் மூழ்கடித்தது. இதனால் இந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. தொடர் மழையின் காரணமாக 5 மாடுகள், 2 ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தன. மேலும் 11 இடங்களில் வீடுகள், சுவர்கள் இடிந்து விழுந்தன. சுமார் 11 ஆயிரம் ெஹக்டேர் விளை நிலங்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து கணக்கெடுக்கும் பணிகள் நடக்கிறது.
விழுப்புரம் நகரை பொறுத்தவரை பேருந்து நிலையம், குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. கீழ்பெரும்பாக்கம் தரை பாலம் முழுமையாக மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மயிலம் பகுதியில் கீழ்மயிலம், முட்டியூர் மற்றும் காட்ராம்பாக்கம் ஏரிகள் உடைந்து அருகில் இருந்த கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. வெளியேற முடியாமல் தவித்த மக்களுக்கு சில சமூக ஆர்வலர்கள் உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியமான பொருட்களை விநியோகித்து வருகின்றனர். மயிலம் சுற்றியுள்ள பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான புளிய மரங்கள் புயலின் சீற்றத்தால் வேரோடு சாய்ந்தன. இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் உடனடியாக சென்று மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து பாதிப்பை சரி செய்தனர்.
அதேபோல் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டிருப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. வரலாறு காணாத அளவு பெய்த மழையால் விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சாலைகளும் வெறிச்சோடின. கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை. இயல்புநிலை திரும்ப ஓரிரு நாட்களாகும் என்று தெரிகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுன்படி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம், கடலூர், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கி மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். மேலும் அமைச்சர்கள் பொன்முடி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், செந்தில்பாலாஜி, கணேசன், சிவசங்கர் ஆகியோரும் கடலூர், விழுப்புரத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளில் அதிகாரிகளுடன் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம்: கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை 2வது நாளாக முடங்கியது. பெரும்பாலான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு 10 ஆயிரம் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடலூர், சிதம்பரம் போன்ற பெருநகரங்களில் இருந்து சென்னை, புதுச்சேரி மற்றும் ஈசிஆர் சாலை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் 2வது நாளாக நிறுத்தப்பட்டன. கடலூர்- பண்ருட்டி சாலை, விருதாச்சலம் சாலை, சிதம்பரம் சாலை உள்பட மாவட்டத்தின் உட்பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடலூர்- குமுத்தான்மேடு பெண்ணை ஆற்றில் உள்ள தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் 10 ஆயிரம் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பேரிடர் மீட்பு படையினர் படகுமூலம் கங்கணம்குப்பம் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களை மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்தனர். 1,400 பேருக்கு உணவு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
வீராணம், வாலாஜா, பெருமாள் ஏரிகள் முழு கொள்ளளவை நெருங்கியதால் உபரி நீரை வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கெடிலம் ஆற்றில் 6,000 கன அடி அளவிற்கும் கடலூர் பகுதி பெண்ணையாற்றில் 2,000 கன அடி அளவிற்கும் வெள்ளம் பெருகெடுத்து ஓடியது. மாவட்டத்தில் 10 கால்நடைகள் பலியானதோடு, 29 வீடுகள் சேதமடைந்தன. மாவட்டத்தில் திட்டக்குடி, சிதம்பரம், கடலூர், விருத்தாசலம் வட்டங்களில் ஆடு, மாடு என 10 கால்நடைகள் பலியாகின. 29 வீடுகள் இடிந்து சேதம் அடைந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தை சேர்ந்த 2263 முன்களப்பணியாளர்களும், 274 தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களும் தயார்நிலையில் இருந்து சாய்ந்த 127 மின்கம்பங்கள் மற்றும் 1.7 கி.மீ. நீளத்திற்கான மின் பாதைகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே சிங்கிரிகோவில் அருகே செல்லும் நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சாய்ந்து நாசமானது. நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அமிர்தி வன உயிரியல் பூங்கா அருகிலுள்ள 2 தரைப்பாலங்களும் நீரில் மூழ்கின. இதனால் 25க்கும் மேற்பட்ட மலை குக்கிராமங்களுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சிங்கிரிகோவில் பகுதி தரைப்பாலமும் நீரில் மூழ்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக வயல்களுக்குள் மழைநீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கிரிவல பாதையில் உள்ள கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. நொச்சிமலை ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் திண்டிவனம் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதேபோல கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
பெஞ்சல் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரண முகாம்களான அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகள்
பெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரியில் வரலாறு காணாத அளவிற்கு சூறைகாற்றுடன் 49 செமீ மழை பெய்துள்ளது. பாதிக்கப்பட்ட பொது மக்களை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் அவசர தேவை கருதி அரசு பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளி- கல்லூரிகளிலும் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். மறுஅறிவிப்பு வரும் வரை அனைத்து பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நேற்று எல்லா காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
இசிஆரில் போக்குவரத்துக்கு தடை
பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேய் மழை காரணமாக மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளம் அருகில் உள்ள உப்பளங்களில் புகுந்து, கிழக்கு கடற்கரை சாலையில் பெருக்கெடுத்துள்ளது. இதனால் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட தீர்த்தவாரி பகுதியில் இசிஆர் சாலையின் ஒரு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்திற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் ஒரு வழித்தடத்தில் மட்டுமே போக்குவரத்து செல்கிறது.
அரசு மருத்துவமனைக்குள் வெள்ளம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தொடர் கனமழையால் பி ஏரி நிரம்பி திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் வெள்ளபெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையின் ஆண்கள் பிரிவில் வெள்ளம் புகுந்தது. அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனித்தீவாக மாறிய ஏற்காடு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பெஞ்சல் புயலால் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் துண்டித்து 67 மலை கிராமங்கள் இருளில் மூழ்கியது. தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் 22 கிராமங்கள் தனித்தீவாக மாறியது. சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து, சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. நாகலூர்-செம்மநத்தம் பாதையில் கடுக்காமரம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது.
களத்தில் இறங்கிய ராணுவம்
புதுவையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர். இவர்களுடன் 70 ராணுவ வீரர்களும் களத்தில் இறங்கி வீடுகளில் வெளியேற முடியாமல் தவித்த மக்களை படகுகள் மூலம் மீட்பது, உணவு வழங்குவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி போலீசார், தீயணைப்பு வீரர்கள் உட்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 5 ஆயிரம் ஊழியர்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கரையை கடந்தது பற்றிய குழப்பம்
பெஞ்சல் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு கரையை கடந்தாலும், 6 மணி நேரமாக கரை பகுதியிலே நகராமல் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை மையம் நேற்று அறிவித்தது. மேலும் தொடர்ந்து 70 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது. அதேசமயம் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், செயற்கைக்கோள் புகைப்படங்களின் அடிப்படையில் பெஞ்சல் புயல் நேற்று பகல் 11.30க்குதான் கரையை கடந்தது என்று கூறியுள்ளார். இதனால் பெஞ்சல் புயல் எப்போது கரையை கடந்தது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களிடம் செல்போனில் பேசிய முதல்வர்
திண்டிவனம்- மரக்காணம் சாலை மேட்டுத்தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக மரக்காணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர். வனத்துறை அமைச்சர் பொன்முடி, நரிக்குறவர்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவரது செல்போன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் நரிக்குறவர்களிடம் பேசினார். அப்போது நரிக்குறவர்கள் எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். முன்னதாக புயல் பாதிப்புகள், நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் அமைச்சர் விளக்கினார்.
கலெக்டர் குடியிருப்பில் சுற்றுச்சுவர் இடிந்தது வீட்டில் மழைநீர் புகுந்தது
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரி முழுமையாக நிரம்பியது. உபரிநீர் வெளியேறியதால் வேலூர் சாலையில் வெள்ளம் சூழ்ந்து போக்குவரத்து பாதித்தது. எனவே, அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல், புறவழிச் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. இதனால் கலெக்டர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதனால், மழை வெள்ளம் கலெக்டரின் வீட்டுக்குள் புகுந்தது. உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் வந்து கால்வாய்களை பொக்லைன் இயந்திரம் மூலம் சீர் செய்தனர்.
புதுவையில் 500 கார்கள், 1,000 பைக்குகள் மூழ்கின
புதுவையில் கொட்டி தீர்த்த கனமழையால் 45 அடி சாலை அடுக்குமாடி வீடுகள், சித்தன்குடி, வெங்கட்டா நகர், ரெயின்போ நகர், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட கார்களும், 1,000க்கும் மேற்பட்ட பைக்குகளும் மழை வெள்ளத்தில் மூழ்கின.
படகில் சென்று கவர்னர் ஆய்வு
புதுச்சேரியில் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கினார். அந்த உணவை கவர்னர் சுவைத்தும் பார்த்தார். இந்த ஆய்வின்போது, அமைச்சர் நமச்சிவாயம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்எல்ஏ, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். இதைத் தொடர்ந்து, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர கால உதவி மையத்தில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரியில் 4 பேர் பலி
புதுவை முதலியார்பேட்டை தியாகுமுதலியார் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜி (27). பெயின்டர். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அருகில் உள்ள வீட்டுக்கு சென்று தங்கியுள்ளனர். ராஜி மட்டும் தனது வீட்டிலேயே தங்கியுள்ளார். புயல் மழையின்போது மற்றவர்களுடன் சமுதாய நலக்கூடத்தில் தங்கியவர் அதிகாலையிலேயே எழுந்து தனது வீட்டிற்கு திரும்பி வந்து படுத்திருந்தார். மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததில் அவர் அதில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதேபோல மழை, வெள்ளத்தில் சிக்கி கோவிந்தசாலை, லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மேலும் 3 பேர் உயிரிழந்ததாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
30 ஆண்டில் முதல்முறை
புதுச்சேரி வரலாற்றிலேயே 1995 முதல் 2024 வரை கடந்த 30 ஆண்டுகளில் அதிகபட்சமாக நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை ஒரே நாளில் 49 செ.மீ., மழை கொட்டி தீர்த்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாக கடந்த 2004 அக்டோபர் 31ம்தேதி ஒரே நாளில் 21 செ.மீ., மழை பெய்துள்ளது.