புதுடெல்லி: சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த குருமுக் சிங் என்பவருக்கு எதிராக ஐடி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் சைபர் குற்றங்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் சம்பந்தப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு உட்பட அனைத்து தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டையும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன், ‘இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபரான குருமுக் சிங், சைபர் சட்ட குற்றவாளி என்பதின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.84 லட்சம் வரையில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் குருமுக் சிங்கை டெல்லியில் வைத்து கைது செய்து சட்ட விதிகளின் படி தமிழ்நாடு அழைத்து வந்தனர். குறிப்பாக சைபர் குற்றப்பிரிவு மூலம் அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டது.
குருமுக் சிங்கின் 17 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து ரூ.44ஆயிரம் ரொக்கத்தொகை, ஐந்து செல்போன்கள், ஒரு லேப்டாப், கிரிடிட் கார்டு , காசோலை புத்தகம் ஆகிய அனைத்து கைப்பற்றப்பட்டது. தமிழ்நாடு அரசின் சட்ட விதி 14-1982ன் கீழ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு எந்தவித நிவாரணமும் வழங்க கூடாது. மேலும் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த விரிவான அறிக்கை கொண்ட பதில் மனுவும் எங்களது தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.
அப்போது மேல்முறையீட்டு மனுதாரர் குருமுக் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்னதாக தான் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு கூடுதல் விளக்க மனு தாக்கல் செய்ய எங்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். மேலும் வழக்கில் தொடர்புடைய நபரான குருமுக் சிங் கடந்த 11 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் ஆகிய அனைத்தும் தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது.
எனவே நாங்கள் மேல்முறையீட்டு மனுதாரருக்கு எந்தவித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது. மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கின் விசாரணை முடியும் வரையில் நாங்கள் இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் முதலில் விளக்க மனுவை தாக்கல் செய்யுங்கள்’ என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.