
சென்னை: சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சைபர் குற்றங்களை புலனாய்வு செய்யபுதுவகை சைபர் குற்றங்களுக்கான தீர்வினை கண்டறியும் முயற்சியின் முதல் படியாக சென்னை மாநகர காவல் துறை கடந்த டிசம்பர் மாதம் ‘ஹேக்கத்தான்’ போட்டி நடத்தியது.சென்னை விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2வது சைபர் ‘ஹேக்கத்தான்’ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை மற்றும் தொடர்புடைய வாலட்டினை கண்டறிதல், மொபைல் போனிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை விரைந்து மீட்டெடுத்தல், குறிப்பிட்ட சொற்பதங்களை கொண்டு சமூக வலைத்தளங்களில் தொடர்புடைய பதிவுகளை தேடுதல், சிசிடிவி காட்சிப் பதிவுகளில், வழக்கத்திற்கு மாறாக தென்படும் நபர்களையோ, பொருட்களையோ கண்டறிந்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல், டெலிகிராம் போன் அழைப்பின் அழைப்பாளரின் நிகழ்கால இருப்பிடத்தை கண்டறிதல் போன்ற 5 தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த சைபர் ஹேக்கத்தான் போட்டில் கலந்து கொள்ள https:vitchennai.acm.orgyberx.html என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்ட லிங்கை பயன்படுத்தி விவரங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பிக்க வரும் 30ம் தேதி கடைசி நாள். இறுதி கட்டப்போட்டிகள் மே 19 மற்றும் 20 தேதிகளில் சென்னை விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2வது பரிசாக ரூ.30 ஆயிரம், 3வது பரிசாக ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.