சென்னை: இணைய வழி குற்றப்பிரிவின் “ஹைத்ரா” என்ற நாடு முழுவதுமான சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. நாடு முழுவதும் சைபர் குற்றங்களில் ஈடுபட்ட சைபர் குற்றவாளிகளைக் கைது செய்ய தமிழ்நாடு காவல்துறையின் இணைய வழி குற்றப்பிரி தேசிய அளவில் ஆபரேஷன் ஹைட்ரா” என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையின் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய இணைய மோசடிக் குற்றங்களில் ஈடுபட்ட ஏழு நபர்களை கைது செய்துள்ளது. பல்வேறு சிறப்பு படைகள் அமைக்கப்பட்டு உத்தராகண்ட் ஜார்கண்ட் அஸாம் மற்றும் டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர். இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம், திருமண தள மோசடி, வங்கி விவரம் திருடும் மோசடி மற்றும் கல்வி ஊக்கத்தொகை மோசடியுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருமண தள மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பான ஒரு வழக்கில், வாடிக்கையாளர்கள் போலி திருமண சுயவிவரங்கள் மற்றும் உயர்ந்த இலாபங்களை உறுதியளிக்கும் முதலீட்டு வாய்ப்புகளால் ஏமாற்றப்பட்டனர் தொழில்நுட்ப ஆதாரங்கள் மற்றும் பண பரிமாற்ற விவரங்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், உத்தராகண்டில் ஜாஸ்பூரைச் சேர்ந்த மொஹம்மத் தவூத் (21) மற்றும் மொஹம்மத் வாசீம் (34) ஆகியோர் 28.05.2025 அன்று கைது செய்யப்பட்டனர். மோசடியில் பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை உருவாக்கி வழங்கிய முக்கிய குற்றவாளிகள் இவர்கள்
மாநில சைபர் குற்ற விசாரணை மையத்தில் பதியப்பட்ட மற்றுமொரு வழக்கில் (SCCIC, சென்னை) வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியாக நடித்து, ஒரு தனிநபர் ICICI வங்கியைச் சேர்ந்தவர் எனக் கூறி வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு, KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி WhatsApp-ல் APK கோப்பை அனுப்பினார்.
அந்தப் பயன்பாட்டை நிறுவியவுடன், வாடிக்கையாளர் தனது தனிப்பட்ட மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை இணைய வழியாக வழங்கினார். அதனை பயன்படுத்தி, நபரின் பெயரில் உடனடி கடன் பெற்று, மொத்தம் ரூ.4,05,100 மோசடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் பங்கஜ் குமார் (40) – ஜார்கண்ட், ஹிடேஷ்வர் பிஸ்வாஸ்ஹிட்டு (30) அஸ்ஸாம், மற்றும் நிஹார் ரஞ்சன் நாத் (51) அஸ்ஸாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தஞ்சாவூர் சைபர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கில் அரசு கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி மாணவர்கள் ஏமாற்றப்பட்டனர். மாணவர்களிடம் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் “செயல்முறை கட்டணம்” எனப்படும் குறைந்த தொகை வசூலிக்கப்பட்டு, பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ப்ரீதி நிக்கோலஸ் (30) மற்றும் மேஷக் (19) ஆகியோர் டெல்லியில் இருந்து 01.06.2025 அன்று கைது செய்யப்பட்டனர்.
இவர்கள், பெற்றோர்களிடம் பேசி மாணவர் விவரங்களை சேகரித்து போலி ஆவணங்களை உருவாக்கியது புலன் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான கல்வி ஊக்கத்தொகை மோசடிகளைக் கருத்தில் கொண்டு, கடந்த 2 மாதங்களில் மட்டும் இதுவரை இந்த குற்றத்தில் தொடர்புடைய ஒன்பது குற்றவாளிகளை டெல்லியில் இருந்து தமிழக சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகளின் பல டிஜிட்டல் மற்றும் நிதி ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மொபைல் போன்களும், சைபர் மோசடியுடன் தொடர்புடைய பல தொலைபேசி எண்களும் இதில் அடங்கும்.
கூடுதலாக குற்றவியல் தயாரிப்புகளை திசைதிருப்பவும் ஏமாற்றவும் பயன்படுத்தப்படும் பல வங்கிக் கணக்குகளை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதில், பல்வேறு மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மொத்தம் 35 வங்கிக் கணக்குகள் மற்றும் 6 மொபைல் போன் எண்கள் பறிமுதல் செய்யப்பட்டு கூடுதல் தடயவியல் பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மாநில காவல்துறை இயக்குநர், காவல் படைத் தலைவர், சங்கர் ஜிவால், “Operation HYDRA”யில் பங்கேற்ற விசாரணை குழுவினரை பாராட்டினார். இணைய வழி குற்றப்பிரிவின் கூடுதல் இயக்குநர் டாக்டர் சந்தீப் மிட்டல், பொதுமக்கள் இப்படியான இணைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கான அறிவுரை:
வங்கி, அரசு அல்லது கல்வித் திட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியாத நபர்கள் அழைக்கும்போது எச்சரிக்கையாக இருங்கள். WhatsApp, SMS அல்லது மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். உங்கள் PAN, Aadhaar, OTP, வங்கி விவரங்கள் போன்றவற்றை தொலைபேசி மூலமாக பகிர வேண்டாம்.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்ப கட்டணம் கோரினால் அவை போலியானதாய் இருக்கலாம் – கல்வி உதவித்தொகை குறித்து அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மட்டுமே சரிபார்க்கவும். திருமண தளங்களில் சந்திக்கும் நபர்களிடம் பணம் அனுப்புவதைத் தவிருங்கள். இந்த தளங்களில் உள்ள கணக்குகளை சரிபார்த்த பின்னரே தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டும்
வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் அல்லது மின்னஞ்சல்களில் அனுப்பப்படும் சந்தேகத்திற்கிடமான இணையதள இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். உங்கள் வங்கி கணக்கு அல்லது சிம் கார்டை பிறர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். அவை குற்றச்செயல்களுக்கு பயன்படும் வாய்ப்பு உள்ளது.
செயலிகள் பதிவிறக்கம் செய்யும்போது Google Play Store அல்லது Apple App Store போன்ற அதிகாரப்பூர்வ செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும்.
* புகார் அளிக்க:
நீங்கள் ஏதேனும் சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in இல் புகார் அளிக்கவும்