புதுடெல்லி,: தமிழ்நாட்டை சேர்ந்த அபிஜித் சிங் என்பவருக்கு எதிராக ஐடி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் சைபர் குற்றங்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் மேல்முறையீட்டு மனு மற்றும் ஆட்கொணர்வு மனு ஆகியவற்றை அபிஜித் சிங் தந்தை குருமுக் சிங் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஜாய்மால்யா பக்ஷி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு மற்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் ஆகிய அனைத்தும் தீவிரமான குற்றச்சாட்டாக உள்ளது. எனவே நாங்கள் மேல்முறையீட்டு மனுதாரருக்கு தற்போது எந்தவித இடைக்கால நிவாரணமும் வழங்க முடியாது.
மேலும் தமிழ்நாடு அரசு தரப்பில் தொடரப்பட்டுள்ள குண்டர் சட்டத்தையும் ரத்து செய்ய முடியாது. அதேப்போன்று இந்த வழக்கின் விசாரணை முடியும் வரையில் நாங்கள் இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே மேல்முறையீட்டு மனுதாரர் தரப்பில் முதலில் விளக்க மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.